நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.6 எம்பி)

யுத்த கால இழப்புகள் பற்றிய முதல் கட்ட அறிக்கை தயார்

14 ஆகஸ்ட் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:40 ஜிஎம்டி

போரின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர் குழு கூறியிருந்தது

இலங்கையில் யுத்தகால ஆட்சேதங்கள் மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பான கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கை தயாராகிவிட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

1983-ம் ஆண்டு முதல் போர் முடிவுக்கு வந்த 2009-ம் ஆண்டு வரையான காலத்தில் மோதல் சூழ்நிலைகளின்போது ஏற்பட்ட ஆட்சேதங்கள் மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பான கணக்கெடுப்பை அரசாங்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பித்தது.

எல்எல்ஆர்சி ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி அரசாங்கம் இந்தக் கணக்கெடுப்பை தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

ஆட்சேதங்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் பற்றிய ஒட்டுமொத்த அறிக்கையை முதற்கட்டமாகவும் குறித்த 26 ஆண்டு காலத்தில் நடந்துள்ள குறிப்பான மோதல் சம்பவங்கள் பற்றிய விரிவான அறிக்கையை அடுத்த கட்டமாகவும் வெளியிடவுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தலைமை இயக்குநர் டிசிஏ குணவர்தன 8 மாதங்களுக்கு முன்னர் தமிழோசையிடம் கூறியிருந்தார்.

தற்போது முதற்கட்டமான ஒட்டுமொத்த அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக டிசிஏ குணவர்தன தமிழோசையிடம் கூறினார்.

'ஆட்சேதங்கள் எனும்போது, உயிரிழப்புகள், காணாமல்போனவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களின் தகவல்களை திரட்டியுள்ளோம். அதேபோல சொத்திழப்புகளில் காணி இழப்புகள், உடைமைச் சேதங்கள் என பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளோம். இந்தத் தகவல்களைத் திரட்டும்போது தொகுக்கப்பட்ட சாராம்சங்களைக் கொண்டு ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை சில நாட்களில் எல்எல்ஆர்சி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்போம்' என்றார் டிசிஏ குணவர்தன.

குறித்த அறிக்கை அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்கப்படும்வரை அதன் தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட புள்ளிவிபரத் திணைக்களத்தின் தலைமை இயக்குநர் மறுத்துவிட்டார்.

காணாமல்போனவர்களின் உறவினர்கள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர்

விரிவான இரண்டாம் கட்ட அறிக்கை தாமதமாவதன் காரணம் பற்றி தமிழோசை அவரிடம் கேள்வி எழுப்பியது.

'நாங்கள் பல கேள்விக் கொத்துக்களை தயாரித்தோம். ஆட்கள் காணாமல்போயிருந்தால், கொல்லப்பட்டிருந்தால் அந்த சம்பவங்கள் எப்படி நடந்தன, அவற்றின் பின்புலம் என்ன என்பது போன்ற விரிவான தகவல்களை கோரியிருந்தோம். இந்தத் தகவல்கள் பெரும்பாலும் உணர்வுபூர்வமானவை. அவற்றை சரியான முறையில் கணினி மயப்படுத்தும் வேலைகள் தற்போது நடந்துவருகின்றன' என்றார் குணவர்தன.

இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட காலத்தில், அதிகாரிகள் எல்லா வீடுகளுக்கும் செல்லவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்தக் குறைபாடுகள் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டனவா என்று தமிழோசை வினவியது.

'எமது நிர்வாக அதிகாரிகளும், கிராம உத்தியோகத்தர்களும் வீடுவீடாகச் சென்று இந்தக் கணக்கெடுப்பை நடத்தினார்கள். அப்போது அதற்கு மிகப்பெரிய விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் வீடுகளுக்கு வராவிட்டால், அருகிலுள்ள கிராம உத்தியோகத்தரிடம் தகவல் அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எங்களின் தொலைபேசி இலக்கங்களையும் கொடுத்திருந்தோம். எனவே வீடு வீடாக வந்து தகவல் திரட்டவில்லை என்று யாரும் கூறமுடியாது' என்றார் டிசிஏ குணவர்தன.

புள்ளிவிபரத் திணைக்களம் இதற்கான தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது, இந்தக் கணக்கெடுப்பை நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.