மன்னார்: முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பொதுபல சேனா எதிர்ப்பு

  • 8 ஏப்ரல் 2014
மன்னார் முஸ்லிம்களின் போராட்டம்(பழைய படம்)

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பொதுபல சேனா அமைப்பு எதிர்ப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வடமேற்கு மாவட்டமான மன்னாரில் போர் காலத்தில் இடம்பெயர்ந்து வடமேல் மாகாணத்தில் வாழ்ந்துவந்த சுமார் 250 குடும்பங்களின் மீள்குடியேற்றத்தை பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா அரச அதிகாரிகளின் துணையுடன் தடுக்கிறது என்று உள்ளூர் முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

நூறாண்டு காலமாக தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்தப் பகுதியிலிருந்து போர் காலத்தில் தாங்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும், அங்கு வாழ்ந்ததற்கான அனைத்துச் சான்றுகளும் தம்மிடம் உள்ளன என்றும் மறிச்சுக்கட்டி மரைக்காயர் தீவு பள்ளிவாசலின் மௌலவி மஹ்மூத் தவ்ஃபீக் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அப்பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான தமது நிலங்களை இலங்கை படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் எனக் கூறும் அவர், வில்பத்து சரணாலயத்துக்கு அருகிலுள்ள தமது பூர்வீக இடத்தில் மீள்குடியேற முயற்சித்தபோதே, செவ்வாய்கிழமை பொதுபல சேனா அமைப்பினர் வந்து அதற்கு தடை ஏற்படுத்தினர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்புகளுக்கு ஆதரவாக அரச அதிகாரிகளும் செயல்படுவதாகவும் மௌலவி மஹ்மூத் தவ்ஃபீக் கூறுகிறார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பொதுபல சேனா அமைப்பினரின் கருத்துக்களை பெற பிபிசி முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.

இதனிடையே இந்த விஷயத்தில் தலையிட்டு மறிச்சுக்கட்டிப் பகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உதவ வேண்டும் என இலங்கையின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.