நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5.3 எம்பி)

'காணாமல்போனோர் சான்றிதழ்': அரசாங்கத்தின் கண்துடைப்பா?

5 மார்ச் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:23 ஜிஎம்டி

'காணாமல்போனவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடனேயே உறவினர்கள் வாழ்கின்றனர்'

இலங்கையில் யுத்த காலத்தில் காணாமல்போனவர்களுக்காக இறப்புச் சான்றிதழ் கொடுப்பதற்குப் பதிலாக, காணாமல்போயுள்ளவரைக் குறிப்பதற்கான தனியான ஆவணத்தை (Certificate of Absence) வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐநா அபிவிருத்தி செயற்திட்டம் உள்ளிட்ட அமைப்புகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக, காணாமல்போனவர்களைக் குறிப்பதற்கான சான்றிதழ் இலங்கையில் அறிமுகமாவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காணாமல்போன நபர் ஒருவரின் குடும்பத்தினருக்கு இறப்புச் சான்றிதழை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மரணச் சான்றிதழுக்கு ஒப்பான சட்ட ரீதியான அங்கீகாரம் இந்த ஆவணத்துக்கும் கிடைக்கும் என்று வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரிகள் இது தொடர்பில் தமது ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

மறுமணம், சொத்துக் கொடுக்கல் வாங்கல்கள் போன்ற விவகாரங்களில் இந்த புதிய ஆவணம் மூலம் சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளமை பற்றி ஜனாதிபதி ஆணைக்குழுத் தலைவரிடம் தமிழோசை சுட்டிக்காட்டியது.

'இந்த சான்றிதழ் விநியோகிக்கப்படும்போது சட்டரீதியான சிக்கல்களும் ஏற்படலாம். இந்த சட்டச் சிக்கல்கள் பற்றியும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துள்ளார்கள். ஆனாலும் சில விடயங்களில் சட்டரீதியான பிரச்சனைகள் வந்து பின்னர் நீதிமன்றத்துக்குச் சென்று பொருள் விளக்கங்களைப் பெற்றுக்கொண்டுதான் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும்' என்றார் மெக்ஸ்வெல் பரணகம.

'மனித உரிமைகள் கவுன்சில் தலையிட வேண்டும்'

'ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீதிருந்த இறுதி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது': உறவினர்கள்

இதேவேளை, காணாமல்போனவர்களுக்காக 'ஆள் இல்லை' என்பதைக் குறிப்பதாக தனியான சான்றிதழ் வழங்கும் திட்டத்தை காணாமல்போனவர்களின் உறவினர்கள் நிராகரிக்கின்றனர்.

'காணாமல்போனவருக்காக இறப்புச் சான்றிதழ் வழங்குவதும் குறித்த நபர் இப்போது இல்லை என்று சான்றிதழ் வழங்குவதும் ஒன்று தான்' என்று காணாமல்போனோரை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறினார்.

காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் மரணச் சான்றிதழ் வழங்கி நட்டஈடு அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தோல்வி கண்டுள்ள நிலையிலேயே, இந்தப் புதிய ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுந்தரம் மகேந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் காணாமல்போனோர் தொடர்பில் அரசு தீர்வு காண்பதற்கு தவறிவருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு வருகின்ற இந்த சூழ்நிலையில், சர்வதேச அழுத்தத்தை தவிர்ப்பதற்காகவே அரசு இப்படியான 'கண்துடைப்பு வேலைகளை' செய்கின்றது என்றும் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்தார்.

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலையீட்டுடன் விசாரணை நடக்க வேண்டும் என்றும் காணாமல்போனோரை தேடியறியும் குழுவின் செயலாளர் மேலும் கேட்டுக்கொண்டார்.

எனினும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்படுவதை முன்னிறுத்தியே, அரசாங்கம் காணாமல்போனோருக்கு தனியான சட்ட ஆவணத்தை வழங்குவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை காணாமல்போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம மறுத்தமை குறிப்பிடத்தக்கது.