ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத்துக்கு அனந்தி செல்வார்: விக்னேஸ்வரன்

  • 12 பிப்ரவரி 2014
அனந்தி சசிதரன்
அனந்தி சசிதரன்

ஐநாவின் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெறும்போது, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.

இலங்கையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள், மற்றும் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் வடக்கில் உள்ள மக்களின் நிலைப்பாடு என்ன என்பவற்றை அறிந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரெட்டே லோஹன் அம்மையார் அவர்கள் வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்திருந்தார்.

இந்தச் சந்திப்பு பற்றி செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோது, ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தின்போது நீங்கள் அங்கு போவீர்களா? என்று செய்தியாளர் ஒருவர் வினவினார்.

ஆதற்குப் பதிலளித்த முதலமைச்சர், 'இல்லை. நான்போக மாட்டேன். நான் போக வேண்டிய அவசியமும் இல்லை. நிர்வாகம் சம்பந்தமான பிரச்சினைகள் தான் எங்களுக்கு முக்கியமாக இருக்கின்றது. அரசியல் சம்பந்தமான பிரச்சினைகளைப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் பெண்கள் சம்பந்தமான விடயங்கள் காரணமாக, அனந்தி ஜெனீவா போவதற்கு நாங்கள் வசதிகள் செய்து கொடுத்திருக்கின்றோம்' எனத் தெரிவித்தார்.

நோர்வே தூதுவருடனான சந்திப்பின்போது பலதரப்பட்ட விடயங்கள் பற்றி பேசப்பட்டதாகவும் நாட்டின் ஏனைய மாகாணங்களைவிட வேறுபட்ட பிரச்சினைகளைக் கொண்ட வடமாகாணத்தின் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது பற்றி பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சென்றுள்ள நோர்வே தூதுவர், வடமாகாண ஆளுனர், மன்னார் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பலதரப்பினரையும் அவர் தனித்தனியே சந்தித்திருக்கின்றார்.

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார செயலர்கள் சகிதம் நோர்வே தூதுவர் யாழ் ஆயரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தார்.

வடமாகாண சபையின் செயற்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றதா, மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பது குறித்து இந்தச் சந்திப்பின்போது நோர்வே தூதுவர் தம்மிடம் கேட்டறிந்து கொண்டதாக யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.