நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5.5 எம்பி)

முஸ்லிம்களின் இழப்புகள் கணக்கிடப்பட வேண்டும்: ஹஸன் அலி

30 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:49 ஜிஎம்டி

இலங்கையில் போர்க் காலத்தில் முஸ்லிம் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.

அப்படியான கணக்கெடுப்பை அரசே விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் மூலமே முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் பாதிப்புகள் முழுமையாகத் தெரியவரும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமது தரப்பில் பல அமைப்புகள் இந்தக் கணக்கெடுப்பு மற்றும் குறிப்புகளை சேகரித்திருந்தாலும், அவற்றுக்கு சட்டரீதியான ஒரு அந்தஸ்து இல்லையென்றும், அதன் காரணமாகவே அரசே இப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமது கோரிக்கை தமிழ் மக்களின் குரலுக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே இருக்கும் என்றும், தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு முரணானது இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

"பதியப்படாத வேதனை"

கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், வாழ்வாதார பாதிப்புகள் போன்ற விஷயங்கள் எங்குமே பதியப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கணிப்பீடுகளைச் செய்ய இப்போதுதான் காலம் கனிந்துள்ளது என்று கூறும் ஹஸன் அலி, இப்போதுதான் போர் கால இழப்புகள் குறித்து சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது என்றும், அதனாலேயே இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ளது என்றும் கூறினார்.

இலங்கையில் சிங்களவர் மற்றும் தமிழ் தரப்புக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தே உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பேசப்பட்டு வருவது, பாதிக்கப்பட்ட இன்னொரு தரப்பான முஸ்லிம்களுக்கு மிகவும் வேதனையை அளித்துள்ளது என்றும் ஹஸன் அலி கூறுகிறார்.