வடகிழக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து பேரணி

  • 5 டிசம்பர் 2013
பெண்களின் விழிப்புணர்வுப் பேரணி
பெண்களின் விழிப்புணர்வுப் பேரணி

இலங்கையின் வடக்குகிழக்கு மாவட்டங்களில் பெண்களுக்கெதிரான வன்முறையைக் கண்டித்தும், அவற்றை நிறுத்தக் கோரியும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் மாவட்டம் தோறும் பேரணி நடத்தி வருகிறார்கள். இதனையொட்டி வியாழக்கிழமை மன்னார் நகரில் இந்தப் பேரணி நடத்தப்பட்டிருக்கிறது.

நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 ஆம் தேதி வரையில் உலகெங்கும் கடைபிடிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல் பிரசார நடவடிக்கையையொட்டி இந்தப் பேரணிகள் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு உட்பட இலங்கையில் பெண்கள் மீதான வன்முறையானது, மக்களின் வாழ்க்கையையும், சமூக அபிவிருத்தியையும் பாதிக்கின்ற ஒரு பெரிய பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் வடகிழக்கில் உள்ள அம்பாறையில் 19 வன்முறைகளும், மட்டக்களப்பில் 37, வவுனியா 46, மன்னார் 49, முல்லைத்தீவு 10, கிளிநொச்சி 09, யாழ்ப்பாணம் 44 என மொத்தம் 214 பாலியல் வன்முறை சம்பவங்கள் பெண்கள் மற்றும் சிறுமியர்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பெண்கள் செயற்பாட்டு அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன.

பாலியல் குற்றங்களையும், குற்றவாளிகளையும் பகிரங்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களும், சிறுமியரும் அணிந்திருந்த ஆடைகளை, அந்த சம்பங்கள் பற்றிய விபரக் குறிப்புடன் பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் இந்தப் பேரணிகளின்போது காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் குறிப்பாக ஆண்களினதும், ஒட்டுமொத்தமாக சமூகத்தினதும் கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் ஊடாக பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளை இல்லாதொழிப்பதற்குத் தாங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக பெண்கள் செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.