நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.3 எம்பி)

மேலும் ஒரு தொகுதி சம்பூர் மக்கள் ஊர் செல்கின்றனர்

26 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:10 ஜிஎம்டி

மீள்குடியேற்றம் வேண்டி போராடிய மக்கள்

இலங்கையில் கிழக்கே சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு தொகுதி குடும்பங்கள் தமது சொந்த கிராமத்தில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியிலிருந்து போரின் காரணமாக வெளியேறிய நூற்றுக்கணக்கான குடும்பங்கள், பல ஆண்டுகளாக மூதூர் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கிவந்தனர்.

இவர்களில் சூரைக்குடா பகுதியைச் சேர்ந்த 105 குடும்பங்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் சென்று குடியேற வழிசெய்யும் முகமாக இன்று அவர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அங்குள்ள தமது வீடுகள் புதர்மண்டிக் கிடக்கும் சூழலில் உள்ளது என்றும், அதை துப்புரவு செய்யும் பணியில் தாங்கள் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பூர் பத்திரகாளியம்மன் ஆலயம். அங்கு செல்லவும் அனுமதி.

சூரைக்குடா பகுதிக்கு மக்கள் சென்று குடியேறும் அதேவேளை அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர அரச தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

அந்தப் பகுதியிலுள்ள பாடசாலையை சரி செய்து, மாணவர்கள் அங்கேயே கல்விகற்க வழி செய்யப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது கிராமத்துக்கு மீண்டும் திரும்பியதும் வெள்ளாமை மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியும் என்கிற நம்பிக்கை தமக்கு ஏற்பட்டுள்ளதாக சூரைக்குடா சென்று வந்தவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.

சம்பூர் நகருக்கு செல்லும் முக்கிய சாலையை முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.