ஆளுங்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் புலிகள் இல்லை

  • 28 ஜூலை 2013
சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
வடக்கில் போட்டியிட்டு வெற்றிபெற தகைமை உள்ளவர்களுக்கு மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்: அமைச்சர் சுசில்

இலங்கையின் வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தகைமை உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வாய்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வடக்கே ஐந்து நிர்வாக மாவட்டங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் எதிர்வரும் 31-ம் திகதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

'யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் நோக்கோடு பல தரப்பினரும் முன்வந்திருந்தார்கள். அவர்களில் மிகவும் தகுதிவாய்ந்தவர்களைத் தான் நாங்கள் தேர்தலில் களமிறக்கத் தீர்மானித்துள்ளோம்' என்றார் சுசில் பிரேமஜயந்த.

சுதந்திரக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே தான் தேர்தலில் குதிக்க விருப்பம் தெரிவித்ததாக தயா மாஸ்டர் கூறினார்
சுதந்திரக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே தான் தேர்தலில் குதிக்க விருப்பம் தெரிவித்திருந்ததாக தயா மாஸ்டர் கூறினார்

யாழ் மாவட்டத்தில் 7 பேரைத் தான் சுதந்திரக்கட்சி களமிறக்குகிறது. மற்றவர்கள் ஈபிடிபியிலிருந்தும் அகில இலங்கை முஸ்லிம் கட்சியிலிருந்தும் இடதுசாரி கட்சியிலிருந்தும் போட்டியிடுவார்கள். வெற்றி பெறத் தகுதியானவர்களைத் தான் சுதந்திரக் கட்சி தேர்ந்தெடுத்திருக்கிறது' என்றும் அமைச்சர் கூறினார்.

தயா மாஸ்டருக்கு ஏமாற்றம்?

இதேவேளை, தாம் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக சக வேட்பாளர் ஒருவரே தனக்கு அறிவித்ததாகவும் கட்சியின் தலைமைப்பீடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் தமிழோசையிடம் கூறினார்.

இறுதி நேரம் வரை பட்டியலில் தமது பெயர் இடம்பெறுமென்றே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

சுதந்திரக் கட்சியின் அழைப்பின்பேரிலேயே தாம் அக்கட்சியின் உறுப்புரிமையை பெற்று தேர்தலில் போட்டியிட முன்வந்ததாகவும், தற்போது தனது வேட்பாளர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் அக்கட்சியில் இருக்கவே விரும்புவதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

சுயேட்சைக் குழுவாக போட்டியிடும் எண்ணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.