'வடமாகாண தேர்தலுக்கு முன்னர் கண்ணிவெடிகள் அகற்றப்படும்'

  • 22 ஏப்ரல் 2013
இன்னும் 96 சதுர கிலோமீட்டர் பரப்பில் மட்டுமே கண்ணிவெடி அகற்றப்பட வேண்டியுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது
இன்னும் 96 சதுர கிலோமீட்டர் பரப்பில் மட்டுமே கண்ணிவெடி அகற்றப்பட வேண்டியுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது

வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், அந்தப் பிராந்தியத்தில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்திசெய்யப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெலிஓய( மணலாறு) பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்களுக்கான காணி உரிமைப் பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, வடமாகாண தேர்தலுக்கு முன்னர் கண்ணிவெடிகள் அகற்றப்படும் என்று அரச தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வடமாகாணத்தில் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கை 95 வீதம் முடிந்துவிட்டதாகவும் மேலும் 96 சதுர கிலோமீட்டர் பரப்பில் மட்டுமே கண்ணிவெடி அகற்றப்பட வேண்டியிருப்பதாகவும் தகவல் திணைக்களத்தின் அறிக்கை கூறுகிறது.

ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொண்டர் நிறுவனங்கள் இந்தக் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அனுசரணை வழங்கிவருகின்றன.

2009-ம் ஆண்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், வட மாகாணத்தில் சுமார் 2 ஆயிரத்து 64 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.