இரண்டு வழக்குகளிலிருந்து நீதியரசர் காமினி அமரதுங்க விலகினார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 பிப்ரவரி, 2013 - 12:51 ஜிஎம்டி
தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸிடம் வழக்குகளை மாற்றவுள்ளதாகக்கூறி நீதியரசர் காமினி அமரதுங்க இரண்டு வழக்கு விசாரணைகளிலிருந்தும் விலகியுள்ளார்.

தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸிடம் வழக்குகளை மாற்றவுள்ளதாகக்கூறி நீதியரசர் காமினி அமரதுங்க இரண்டு வழக்கு விசாரணைகளிலிருந்தும் விலகியுள்ளார்.

கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றை இந்தியாவின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையிலிருந்து இலங்கை உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் காமினி அமரதுங்க விலகிக்கொண்டுள்ளார்.

இந்த மனு காமினி அமரதுங்க உள்ளிட்ட நீதியரசர்கள் மூவரடங்கிய குழு முன்னால் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இவ்வேளையில், வேண்டுகோளொன்றை முன்வைத்த அரசதரப்பு சட்டத்தரணி குறித்த மனுவை தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் அங்கம் வகிக்கும் நீதியரசர்கள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு மாற்றிவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்த நீதியரசர் காமினி அமரதுங்க, சம்பந்தப்பட்ட மனுவை தலைமை நீதியரசரிடம் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.

கொம்பனித் தெரு பகுதியில் அமைந்துள்ள சுமார் 7 ஏக்கருக்கும் அதிக பரப்புள்ள காணியை இந்திய டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதன்மூலம் அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 600க்கும் அதிகமான குடும்பங்கள் குடிமனைகளை இழப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீகரிக்கப்படும் காணிகளுக்குப் பதிலாக மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று நகர அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் தெரிவித்திருந்தது.

எனினும் மக்களுக்கு வழங்கவுள்ள நிவாரணம் தொடர்பில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெளிவாகத் தெரிவிக்கவில்லை என்று குறித்தப் பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஏசிஎம் பதூர்தீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, கோல்டன் கீ நிறுவனத்தின் நிதி மோசடி வழக்கு விசாரணையிலிருந்தும் விலகிக்கொள்வதாக நீதியரசர் காமினி அமரதுங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்டக் காரணங்களுக்காகவே தான் இந்த விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாகக் கூறிய அவர், அதன்படி இந்த மனுவை விசாரணைக்காக தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸிடம் மாற்றவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.