'சட்டவிரோத ஆயுதக் குழுக்கள் எதுவும் இல்லை': யாழ். இராணுவத் தளபதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 பிப்ரவரி, 2013 - 11:24 ஜிஎம்டி
யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க

யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க

யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி ஆயுதக் குழுக்களை வைத்து நடத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரியவும் ரணில் விக்கிரமசிங்க சுமத்திய குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற வலி. வடக்கு மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுமக்களிடையே புகுந்து அவர்களை வெளியேறிச் செல்லுமாறு யாழ் இராணுவத் தளபதியின் புலனாய்வு பிரிவினரே அச்சுறுத்தியதாக ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்தச் சம்பவத்திற்கு யாழ். கட்டளைத் தளபதியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அது குறித்து நாட்டின் இராணுவத் தளபதி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் அல்லது அவரும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் வளைத்துப்பிடித்தனர்

யாழ்ப்பாணத்தில் மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை வளைத்துப்பிடித்ததாக மக்கள் கூறுகின்றனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே யாழ். கட்டளைத் தளபதி, இரகசிய ஆயுதக்குழுக்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் தனக்குக் கிடையாது என்றும் தனக்குக் கீழ் 13 ஆயிரத்து 500 இராணுவத்தினர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருப்பது போல யாழ்ப்பாணத்தில் இரகசிய ஆயுதக்குழுக்கள் எதுவும் கிடையாது, நாட்டில் இராணுவத்தினர் மாத்திரமே இருக்கின்றார்கள், ஆயுதக்குழுக்கள் என்று எவருமே இல்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சுமார் 15 ஆயிரம் இராணுவத்தினர் இருப்பதாகக் கூறியுள்ள அவர், அங்கு அபிவிருத்திப் பணிகளிலும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலுமே இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை, தெல்லிப்பழையில் இடம் பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது குழப்பம் விளைவித்தார்கள் எனக் கூறி பொதுமக்கள் எவரையும் பிடித்துக் கொடுக்கவில்லை என்றும் பொலிசாரும் எவரையும் கைது செய்யவில்லை என்றும் காவல்துறை பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி ஊடகங்களுக்குத் தெரிவிததிருக்கின்றார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.