மாணவர்களிடம் பள்ளிக்கூடங்கள் பணம் அறவிடுவதால் சர்ச்சை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 பிப்ரவரி, 2013 - 16:58 ஜிஎம்டி
பள்ளிக்கூடங்களில் பல்வேறு தேவைகளுக்காக மாணவர்களிடமிருந்தே பணம் அறிவிட வேண்டிய நிலைமை இருப்பதாக பொறுப்பாசிரியர்கள் கூறுகின்றனர்.

பள்ளிக்கூடங்களில் பல்வேறு தேவைகளுக்காக மாணவர்களிடமிருந்தே பணம் அறிவிட வேண்டிய நிலைமை இருப்பதாக பொறுப்பாசிரியர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் அரச பள்ளிக்கூடங்களில் சில தேவைகளுக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுகின்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கொழும்பிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள ஹொரண என்ற இடத்தில் 13 வயது பள்ளி மாணவி கைது செய்யப்பட்டு, 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தென்னந் தோட்டமொன்றிலிருந்து 8 தேங்காய்களைத் திருடியதற்காக இந்தச் சிறுமி மீது காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பள்ளிக்கூடத்திற்கு வர்ணம் பூசுவதற்காக கேட்கப்பட்ட பணத்தை செலுத்துவதற்காகவே அருகிலிருந்த தோட்டத்திலிருந்து தேங்காய்களை எடுத்ததாக அந்த மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

'இலவசக் கல்வித்துறையே மக்களிடமிருந்து பணம் அறிவிடுகிறது'

பள்ளிக்கூடங்களின் அபிவிருத்தி வேலைகளுக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் மாணவர்களிடத்திலிருந்து பணம் அறவிடுகின்ற நடைமுறை நாடு முழுவதும் இருந்துவருகிறது.

அரசாங்கத்திடமிருந்து கிடைக்கின்ற பணம் போதாமையினாலேயே மாணவர்களிடத்திலிருந்து பல தேவைகளின்போது மாணவர்களிடமிருந்து பணம் அறிவிட வேண்டிய தேவை ஏற்படுவதாக பள்ளிக்கூட பொறுப்பாசிரிகள் கூறுகின்றனர்.

ஆனால் இப்படியாக மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவது தவறு என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிபிசியிடம் கூறினார்.

இலங்கையில் கல்வித்துறையே பொதுமக்களிடமிருந்து அதிகளவு பணம் அறவிடுகின்ற துறையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதேவேளை, இந்த விவகாரம் குறித்து இலங்கை அமைச்சரவையிலும் ஆராயப்பட்டுள்ளது.

ஹொரணை மாணவி கைது சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கல்வி மற்றும் நீதித் துறைகளுக்கான அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் மாணவர்களிடமிருந்து பள்ளிக்கூடங்கள் பணம் அறவிடுவதற்கு தடை உள்ளதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கின்ற அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.