BBC navigation

மகேஸ்வரனின் சகோதரர் மீது அசிட் வீச்சு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 டிசம்பர், 2012 - 11:51 ஜிஎம்டி
2008-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று கொழும்பில் கோயிலுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன் எம்.பியின் சகோதரர் துவாரகேஸ்வரன் ஏற்கனவே தனக்குள்ள அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடுகள் செய்திருந்தார்.

2008-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று கொழும்பில் கோயிலுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன் எம்.பியின் சகோதரர் துவாரகேஸ்வரன் தனக்குள்ள அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடுகள் ஏற்கனவே செய்திருக்கிறார்.

முன்னாள் யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரராகிய தியாகராஜா துவாரகேஸ்வரன் மீது சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் வைத்து அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

இவர், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தனது மகனின் பிறந்தநாளையொட்டி, நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளைச் செய்துவிட்டு தனது வாகனத்தில் ஓட்டுனர் இருக்கையில் ஏற முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் தன்மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், வீசப்பட்ட அசிட் தனது கழுத்து மற்றும் முதுகுபுறத்தில் பட்டு தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

தாக்குதல் நடத்தியவர்களை தெளிவாக அடையாளம் கண்டிருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

பாதுகாப்புச் செயலரிடம் ஏற்கனவே முறைப்பாடு

தனிப்பட்ட ஒரு பிரச்சினை காரணமாகவே தம்மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார். தமக்கு இராணுவத்தினரிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருப்பது தொடர்பில் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக செய்துள்ள முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் நடைபெற்றுவரும் வேளையிலேயே தம்மை அச்சுறுத்தி பணிய வைப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக துவாரகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

தான் இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் எதிரானவர் அல்ல என்றும், எனினும் இராணுவத்தில் இருப்பவர்கள் இராணுவத்திற்குக் கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக இராணுவ தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

அசிட் தாக்குதலுக்கு உள்ளாகிய துவாரகேஸ்வரன் தற்போது யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருப்பதுடன் அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அசிட் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் துவாரகேஸ்வரனின் சகோதரனும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராஜா மகேஸ்வரன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப் பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் அக்காலப் பகுதியில் இடம்பெற்றுவந்த பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்தும் அவர் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.