படகுகளைத் தடுக்க இலங்கை- ஆஸி. கூட்டுத் திட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 டிசம்பர், 2012 - 18:14 ஜிஎம்டி
4 அம்சத் திட்டத்தை ஆஸி. வெளியுறவு அமைச்சர் வெளியிட்டார்.

4 அம்சத் திட்டத்தை ஆஸி. வெளியுறவு அமைச்சர் வெளியிட்டார்.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் ஆட்களை கொண்டுசெல்லும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இலங்கையின் புலனாய்வு மற்றும் ஆயுதப் படையினருக்கு பயிற்சி வழங்கப் போவதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பாப் கார் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை இன்று முடித்துக் கொள்ள முன்னதாக கொழும்பில் இன்று திங்கட்கிழமை இலங்கை வெளியுறவு அமைச்சருடன் ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் கலந்துகொண்டார்.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலமாக தஞ்சம்கோரி வருவோரை தடுத்து நிறுத்தும் ஆஸ்திரேலிய அரசின் முக்கிய செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இலங்கை சென்றிருந்தார்.

கூட்டுத் திட்டமும் தமிழ்க் கூட்டமைப்பும்

இலங்கை-ஆஸி. கூட்டுத் திட்டமும் தமிழ்க் கூட்டமைப்பும்

இலங்கை- ஆஸி. இடையிலான கடற்படைக் கண்காணிப்பு, புலனாய்வு கூட்டுத் திட்டமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்த ஆண்டில் மட்டும் படகுகள் மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்களில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேரை தடுத்து நிறுத்தியுள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.
நூற்றுக் கணக்கானவர்களை ஆஸ்திரேலிய அரசே அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பியிருக்கிறது.

இன்னும் பலநூற்றுக் கணக்கானவர்களை பரிசீலனைக்காக ஆஸ்திரேலியா முகாம்களில் தடுத்துவைத்திருக்கிறது.

இவ்வாறு இலங்கைக்கு பலவந்தமாக திருப்பியனுப்பும் நடவடிக்கை தஞ்சம்கோரி வந்தவர்களை மீண்டும் சித்திரவதையாளர்களின் கைகளில் சிக்கச்செய்கின்ற வேலை என்று மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டிவருகின்றன.

ஆனால் இலங்கை அரசோ இப்படியான குற்றச்சாட்டை தொடர்ந்தும் மறுத்துவருகிறது.

இதேவேளை, சித்திரவதைகளுக்கு உள்ளாகக்கூடியவர்கள் என்று கருதப்படக்கூடியவர்களை தாங்கள் திருப்பியனுப்பப்போவதில்லை என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.

புலனாய்வு, இராணுவப் பயிற்சி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி படகுகளில் வருவோர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளா்.

தஞ்சம்கோரி படகுகளில் வருவோர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளா்.

இலங்கையிலிருந்து படகுகள் மூலம் தங்களிடம் வரமுனைவோர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசு அதன் கொழும்புத் தூதரகம் வழியாக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அண்மைக்காலங்களாக முன்னெடுத்துவருகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்களான பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ போன்ற உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சட்டவிரோத குடியேறிகளை படகுகள் மூலம் கடத்திக் கொண்டுவர உதவும் வலையமைப்புகளை முறியடிப்பதற்கான இருதரப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றை பாப் கார் இலங்கையில் தொடங்கி வைத்திருக்கிறார்.

அதற்காக அவர், நான்கு அம்சத்திட்டத்தை கொழும்பில் அறிவித்துள்ளார்.

இரு தரப்பிலும் கடற்படை மற்றும் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, அதற்காக சிறப்பு புலனாய்வு பயிற்சிகளை இலங்கைக்கு வழங்குவது என்பது அந்த அம்சங்களில் முதன்மையானது.

அதேபோல கடலுக்குள் வைத்து படகுகளை வழிமறித்து தடுத்துநிறுத்துவதற்கான பயிற்சியையும் ஆகாயவழி கண்காணிப்பு வசதிகளையும் இன்னும் பல கடற்படை கருவிகளையும் இலங்கை கடற்படைக்கு வழங்குவதும் பார் கார் அறிவித்துள்ள இன்னொரு திட்டம்.

இதுதவிர உள்நாட்டில் தொழில் மற்றும் கல்வி வசதிகளை ஊக்குவிக்கும் செயற்பாட்டிலும் ஆஸ்திரேலிய அரசு ஈடுபடவுள்ளது.

இலங்கையிலிருந்து அபாயகரமான படகுப் பயணத்தை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் 'பொருளாதார தேவைகளுக்காகவே' தஞ்சம் கோரிவருகிறார்கள் என்று ஆஸ்திரேலியா கருதுகிறது.

'அச்சத்தில் தமிழ் இளைஞர்கள்': சுரேஷ் எம்.பி.

அண்மைக் காலங்களாக வட இலங்கையில் இளைஞர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக சுரேஷ் எம்.பி. கூறுகிறார்.

அண்மைக் காலங்களாக வட இலங்கையில் இளைஞர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக சுரேஷ் எம்.பி. கூறுகிறார்.

இலங்கையில் 2009-ம் ஆண்டில் முடிவுக்கு வந்த சிவில் யுத்தத்தின் பின்னர், அந்நாட்டின் மனித உரிமைகள் விவகாரத்தால் இலங்கையுடனான பல மேற்குலக நாடுகளுடனின் உறவுகள் மோசமடைந்துள்ளன.

இந்த நிலையில் இலங்கையுடன் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை முன்னெடுப்பது தவறான நடவடிக்கை என்று ஆஸ்திரேலியாவின் பசுமைவாதக் கட்சிக் கூறுகிறது.

இதேவேளை, அடுத்த மார்ச்சில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் சூடுபிடிக்க இருக்கின்ற நிலையிலும் அடுத்த காமன்வெல்த் உச்சி மாநாடு இலங்கையில் நடக்க இருக்கின்ற நிலையிலும், பாப் காரின் இந்த விஜயம் இருதரப்பு உறவுகளில் முக்கிய முன்னேற்றங்களை காட்டியுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜிஎல் பீரிஸ் கூறினார்.

இதேவேளை, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் இந்த விஜயத்தின்போது சந்தித்துப் பேசியிருந்தார்.

நாட்டில் மீண்டும் கைதுகள் மற்றும் கடத்தல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் தலைதூக்கியுள்ள நிலைமை குறித்து தாம் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரிடம் எடுத்துக் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோட வேண்டும் என்று எண்ணம் அண்மைக்காலங்களாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவருவதாகவும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவிகள் மூலமான கல்வி மற்றும் தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பலாபலன்களை அனுபவிக்கும் நிலையில் வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்பதை தாங்கள் பாப் காரிடம் சுட்டிக்காட்டியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.