BBC navigation

கைதான யாழ் மாணவர்கள் வெலிக்கந்தை முகாமில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 டிசம்பர், 2012 - 15:27 ஜிஎம்டி
கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக் கழக மாணவர் தலைவர் பி தர்ஷானந்த்

கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக் கழக மாணவர் தலைவர் பி தர்ஷானந்த்

இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த மாத இறுதியில் மாவீரர் தின காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து படையினரால் கைது செய்யப்பட்ட மாணவர்களில் நான்குபேர் வெலிக்கந்தை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள். இவர்கள் நால்வருக்கும் 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ்துறை பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி கூறியிருக்கின்றார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்துறை பீடாதிபதி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி, கைது செய்யப்பட்ட மாணவர்களில் எட்டுப் பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். எனினும், நான்குபேர் வெலிக்கந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பல்கலலக்கழக சமூகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.

இந்த மாணவர்களை விடுதலை செய்வதற்காக பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள் ஆகியோர் உரிய பல உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

'எனினும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படும் வரையில் தமது வகுப்புப் புறக்கணிப்பு தொடரும் என பல்கலைக்கழக மாணவர்கள் சொல்லியிருப்பதனால், பல்கலைக்கழகம் மாணவர்களின்றி வெறிச்சோடிக்கிடக்கின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்து, தடைபட்டுள்ள பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பல்கலைக்கழகத்தின் முயற்சிகள் மூலம் எப்போது இதனை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்பதை எங்களால் கூற முடியாதிருக்கின்றது' என பேராசிரியர் கந்தசாமி கூறியிருக்கின்றார்.

வடமாகாண சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பு

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடமாகாண சட்டத்தரணிகள் நான்கு நாள் பணிபுறக்கணிப்பு ஒன்றை செவ்வாயன்று ஆரம்பித்திருக்கின்றார்கள். இதனால் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் யாழ் குடாநாட்டின் ஏனைய நீதிமன்றங்கள் அனைத்திலும் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை.

'பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைகளில், அவர் தமது பக்க நியாயத்தை எடுத்துக் கூறுவதற்கான முழுமையான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. பிரதம நீதியரசருக்கே இந்த நிலைமை என்றால், வருங்காலத்தில் நீதித்துறை எந்தவிதமாக இயக்கப்படப் போகின்றது என்பது குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம்' என்று யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியும், ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய சாந்தா அபிமன்னசிங்கம் கூறியிருக்கின்றார்.

'எங்களுடைய நோக்கம் அரசாங்கம் செய்வது சரியா பிழையா என்று கூறுவதல்ல. விசாரணை நடைபெற்ற முறைமை பிழை, நீதித்துறை சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும், பிரதம நீpதயரசருக்கு எதிரான விசாரணையில் எமக்குத் திருப்தியில்லை என்பதைக் காட்டுவதற்கும், நியாயமான விசாரணையொன்று நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தியுமே நாங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றோம்' என வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் அன்ரன் புனிதநாயகம் கூறுகின்றார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.