ஷிராணி : மூன்று குற்றங்கள் உறுதி என்கிறது தெரிவுக்குழு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 டிசம்பர், 2012 - 11:21 ஜிஎம்டி


இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டி பணிநீக்கம் செய்வதற்கான விசாரணையை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு கூறியிருக்கிறது.

நீதியரசர் மீது சுமத்தப்பட்ட நிதி மற்றும் பணியில் தவறாகச் செயற்படல் ஆகிய குற்றச்சாட்டுக்களை இந்த தெரிவிக்குழு விசாரித்தது.

ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு மீது சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுக்களில் அவர் மூன்றில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக அந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நியாயமானவையாக இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி அந்த விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி வெளிநடப்புச் செய்திருந்தார்.

இந்த விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தலைமை நீதிபதியின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அந்த தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் அநுர பிரிய தர்ஷண யாப்பா அவர்கள், ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 14 குற்றச்சாட்டுக்களில் 5 குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே விசாரணைக்கு எடுக்கப்பட்டதாகவும், அவற்றில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட ஏனைய இரு குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த விசாரணையின் போது 14 சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

செலிங்கோ என்ற நிறுவனத்தின் மீதான வழக்கு ஒன்றை விசாரணை செய்துகொண்டிருந்தபோது அந்த நிறுவனத்தின் வீடு ஒன்றை கொள்வனவு செய்தமை குறித்த குற்றச்சாட்டில் தலைமை நீதிபதி குற்றவாளியாக காணப்பட்டதாகவும், தனது சொத்து மற்றும் உடமைகள் குறித்த விபரங்களை வெளிப்படுத்தத் தவறியமை, தனது கணவருக்கு எதிரான வழக்கில் தலையீடு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதாகவும் யாப்பா தெரிவித்தார்.

ஏனைய இரு குற்றச்சாட்டுக்களில் இருந்து ஷிராணி விடுவிக்கப்பட்டதாகவும், இந்த விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உள்ளாக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி மீது குற்றம் காணப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு கூறியுள்ளதை ஷிராணி பண்டாரநாயக்காவின் சட்டத்தரணிகள் நிராகரித்துள்ளனர்.

அவர் மீதான இந்த குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு அறிவித்தமை தமக்கு ஆச்சரியத்தை தருவதாக சட்டத்தரணி நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான விசாரணை நடத்த சந்தர்ப்பம் தரப்பட்டிருந்தால் இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவை என்பதை தாம் நிரூபித்திருப்போம் என்றும் அவர் கூறினார்.

தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான தெரிவுக்குழுவில் இருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விலகிக்கொள்வதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இப்போது இந்த அறிவிப்பை தெரிவுக்குழு வெளியிட்டுள்ளது.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.