BBC navigation

இராணுவத்துக்கு காணியை தர மறுத்த பிரதேச சபை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 நவம்பர், 2012 - 16:21 ஜிஎம்டி

இலங்கையில் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச உள்ளுராட்சி சபைக்கு சொந்தமான காணியிலும் கட்டிடத்திலும் தற்காலிக முகாம் அமைத்துள்ள இலங்கை இராணுவம், அந்தக் கட்டிடத்தையும் காணியையும் நிரந்தரமாக தமக்கு கையளிக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைக்கு பிரதேச சபை தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

631 வது இராணுவ படைப் பிரிவு தலைமையக கட்டளை அதிகாரியினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை தாம் நிராகரித்து, பதில் அனுப்பி வைத்துள்ளதாக பிரதேச சபையின் தலைவர் செல்லையா இராசையா தெரிவிக்கின்றார்.

1990 ம் ஆண்டு தொடக்கம் பிரதேச சபை கட்டிடத்திலும், அது அமைந்துள்ள காணியிலும் இராணுவமும் சிறப்பு அதிரடிப் படையும் மாறி மாறி தமது முகாம்களை அமைத்திருந்ததாக கூறும் அவர், 2010 ம் ஆண்டு சிறப்பு அதிரடிப் படை அதிகார பூர்வமாக காணியையும் கட்டிடத்தையும் தம்மிடம் கையளித்து வெளியேறி சில நாட்களின் பின்பு இராணுவம் சபையின் அனுமதி எதுவுமின்றி அங்கு முகாம் அமைத்ததாகவும் கூறுகின்றார்.

1990 தொடக்கம் தொடர்ந்தும் பிரதேச சபை பொது நூலகத்தின் ஒரு பகுதியில் இயங்குவதையும், புதிய கட்டிடத் தொகுதி அமைப்பதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்த காணியையும் கட்டிடத்தையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு ஏற்கனவே பல தடவைகள் எழுத்து மூலம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தற்போது அரச தனியார் காணிகளையும் கட்டிடங்களையும் உள்ளடக்கியதாக இந்த தற்காலிக இராணுவ முகாம் அமைந்துள்ளதாக கூறும் அவர், தான் அறிந்தவரை இராணுவத்தின் புதிய தீர்மானத்திற்கு தனியார் காணிகளும், வீடுகள் மற்றும் கட்டிடங்களும் உள்வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.