BBC navigation

பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளின் சமூக அக்கறை என்ன?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 அக்டோபர், 2012 - 17:51 ஜிஎம்டி
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்முறை திருத்தச் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களும் சிறுபான்மை மக்களின் நலன்களை கடுமையாகப் பாதிக்கும் என்ற போதிலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தமை அந்தக் கட்சிகளின் சமூக நோக்கங்களை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திவிநெகும சட்டம் நிறைவேற்றப்படுகின்றமை மாகாண சபைகளின் கீழ் வருகின்ற நிதி அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கும் செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளும் ஏனைய சில தேசிய எதிரணிக் கட்சிகளும் சுட்டிக்காட்டியிருந்தன.

அதேபோல உள்ளூராட்சி தேர்தல்முறை திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களில் விகிதாசார தேர்தல்முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் குறைக்கப்படுவதால் வடக்கு கிழக்கு பிரதேசத்துக்கு வெளியே பெரும்பான்மை மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் அரசியல் பிரதிநிதிகளை இழப்பார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் தமது சமூகங்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல் இந்த இரண்டு சட்டங்களும் நிறைவேறுவதற்கு ஆதரவு வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மனோ கணேசன் விமர்சனம்

'அரசுடன் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலை பரிதாபம்'

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

நீதிமன்ற உத்தரவை அடுத்து திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்துக்கு சிக்கல் வந்தபோது, அதற்கு கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளித்ததன் மூலமும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்ததன் மூலமும் அந்தக் கட்சி சிறுபான்மை மக்கள் கோருகின்ற அதிகார பரவலாக்கலுக்கு எதிராக செயற்பட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை?

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கை சிறுபான்மை சமூகங்களின் நலனை பொருட்படுத்தவில்லை'

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கை சிறுபான்மை சமூகங்களின் நலனை பொருட்படுத்தவில்லை'- மனோ கணேசன்

அதேபோல மலையகம், தலைநகர் மற்றும் தென்னிலங்கையின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பான்மை சமூகங்களின் மத்தியில் சிதறிவாழும் சிறுபான்மை சமூகங்களின் மக்களை கடுமையாக பாதிக்கும் உள்ளூராட்சி தேர்தல்முறை திருத்தச் சட்டத்துக்கும் பிரதான தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு தெரிவித்தமை அந்தக் கட்சிகளின் இயலாமையே காட்டுவதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தல்முறை திருத்தச் சட்டமூலம் நிறைவேறுவதற்கு வடக்கு கிழக்கில் செல்வாக்கு பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களித்துள்ளமை வருத்தத்துக்கு உரியது எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் முத்து சிவலிங்கம் பதில்

'ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு செலுத்தி நன்மை பெறுவோம்'

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அரசில் அங்கம் வகிக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு, தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தென்னிலங்கை சிறுபான்மை சமூகங்களை பாதிக்கும் சட்டத்துக்கு ஆதரவு அளித்தது அந்தக் கட்சிகளின் கொள்கை முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதேவேளை இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, உள்ளூராட்சி நிர்வாக முறைகளால் தமது மக்களுக்கு கிடைக்காத நலன்களை மத்திய அரசிலும் நாடாளுமன்றத்திலும் தம்மால் சாதித்துக்கொள்ள முடியும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான முத்துசிவலிங்கம் தமிழோசையிடம் பதிலளித்தார்.

ஆனால் மலையகத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் தோட்டப்புற மக்கள் வாக்களிக்க முடியும், ஆனால் அந்த மன்றங்களிடமிருந்து சேவைகளை பெற முடியாது என்று சட்டரீதியாக தடை இருப்பதாகவும் அந்த சட்டத்தை மாற்றக்கூட அரசில் அங்கம் வகிக்கும் மலையகக் கட்சிகளால் முடியாதிருப்பதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.