"நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க இலங்கை அரசு முற்பட வேண்டும்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 அக்டோபர், 2012 - 15:31 ஜிஎம்டி
நீதிமன்றத்தைக் குறிக்கும் சின்னம்

இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண ஆயுததாரிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை எடுத்து இலங்கை அரசு நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று சர்வேதேச நீதித்துறை வல்லுனர்கள் அமைப்பு கூறியுள்ளது.

மஞ்சுளா திலகரத்தனே மீதான தாக்குதல் நீதித்துறையின் சுதந்திரத்தை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகும் என்று சர்வதேச நீதித்துறை வல்லுனர்கள் அமைப்பின் ஆசிய இயக்குனர் சாம் ஜாப்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள நீதிபதிகள் பாதுகாப்பாகவும், அச்சுறுத்தலுக்கு ஆளாகாமலும் பணியாற்றக்கூடிய ஒரு சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

செப்டம்பர் மாத்த துவக்கத்தில் இலங்கைத் தலைமை நீதிபதி மற்றும் நீதிச் சேவை ஆணைக் குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களையும் சந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித் துறையின் சுதந்திரத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கருத்தில் கொண்டே அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவி நெகும சட்ட மூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தலைமை நீதிபதியையும், நீதிச் சேவை ஆணைக் குழுவின் உறுப்பினர்களாக இருக்கின்ற இரண்டு மூத்த நீதிபதிகளையும் அரச ஊடகங்கள் மோசமாக சித்தரித்துவந்த விடயமும் இந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு சுயாதீனமான ஒரு நீதி அமைப்புத் தேவை என்று கூறியுள்ள ஜாப்ரி, அரச ஊடகம் மூலமாக நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுப்பது நீதித்துறையின் சுதந்திரத்தையும் பக்கச்சார்பற்ற தன்மையையும் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டக் கூட்டம்

இதேவேளை, மஞ்சுள திலகரட்ணவைத் தாக்கியவர்களைக் கைதுசெய்ய இலங்கை அதிகாரிகள் தவறிவருவதாக இலங்கை சட்டவாதிகள் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று சட்டத்தரணிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இக்குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கிலேயே மஞ்சுள திலகரட்ண தாக்கப்பட்டார் என்று அமைச்சர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இக்கூட்டத்தில் ஜனநாயகத்தைக் காப்பதற்கான சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நீதிச்சேவைகள் ஆணைய செயலாளரைத் தாக்கியவர்களை அரசாங்கம் உடனடியாக கைதுசெய்ய வேண்டும். அதைச் செய்ய முடியாவிட்டால் பாதுகாப்பு படையினரால் என்ன பயன் என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.