BBC navigation

யாழ். ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 அக்டோபர், 2012 - 16:39 ஜிஎம்டி
இராணுவத்தினர் காணிகளை கைப்பற்றுகின்றமை, மீள்குடியேற்றம் பற்றி விவாதம் நடந்தது

இராணுவத்தினர் காணிகளை கைப்பற்றுகின்றமை, மீள்குடியேற்றம் பற்றி விவாதம் நடந்தது

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் இன்று திங்களன்று நடைபெற்ற மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அரச தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற காரசாரமான விவாதங்கள் காரணமாக அமளிதுமளி ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கின்றது. வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஈபிடிபி கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இங்கு சமூகமளித்திருந்தனர்.

மீள்குடியேற்றம், பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றுவது, மீன்பிடி பிரச்சனைகள் போன்ற விடயங்கள் இங்கு ஆராயப்பட்டிருக்கின்றன.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில், மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக உரிய வேளைக்கு தமக்கு தகவல்கள் வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதாக ஈபிடிபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் தெரிவித்தார்.

இராணுவத்தின் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதாகவும் எஞ்சியுள்ள காணிகள், வீடுகள் பற்றி அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தி அந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்று ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருப்பதாகவும் சந்திரகுமார் கூறினார்.

கூட்டத்துக்கு முன்பாக கோப்பாய் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்

கூட்டத்துக்கு முன்பாக கோப்பாய் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்

அண்மையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள இரண்டு காணிகள் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுனர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதை உறுதிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ் மாவட்டத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்து தாங்கள் சுட்டிக்காட்டி விவாதித்ததாகக் கூறினார்.

இவற்றில் சில விடயங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், அவை எப்போது நிறைவேற்றப்படும் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக தமக்கு வீதி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனக்கோரி கோப்பாய் ஊரெழு பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் சுலோக அட்டைகளை தாங்கிய வண்ணம் யாழ். செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது குறித்த மகஜர் ஒன்றையும் அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்துள்ளனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.