BBC navigation

கொம்பனித் தெரு அபிவிருத்தி வேலைக்கு தற்காலிகத் தடை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 அக்டோபர், 2012 - 11:22 ஜிஎம்டி
சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க

சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க

கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அப்பகுதியில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்குமாறு கொழும்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 7 ஏக்கர் காணிப் பரப்பை இந்தியாவின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்கி, அரசாங்கம் அங்கு முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டத்தால் தமது குடியிருப்புகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அப்பகுதி மக்கள் தாக்கல்செய்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவுள்ள இந்தக் காணிகளில் தாம் பல பரம்பரைகளாக வாழ்ந்து வந்துள்ளதாக அந்த மக்கள் கூறுகின்றனர்.

அந்த மக்களிடம் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருப்பதாக, அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க சுட்டிக்காட்டினார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் இந்த நடவடிக்கை மூலம் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 600-க்கும் அதிகமான குடியிருப்புகள் இடிக்கப்படும் என்றும் அதனால் 1000-க்கும் அதிகமான குடும்பங்கள் நிர்க்கதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

எனினும், குறித்த பகுதியில் வீடுகளை இழக்கும் மக்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளை வழங்க நகர அபிவிருத்தி அதிகாரசபை இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆனால் அரசாங்கம் அந்த மக்களுக்கு குடியிருப்புகளை வழங்குவதற்கான உறுதியான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கும்வரை அங்குள்ள காணிகளை சுவீகரிப்பதை நிறுத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவிட்டதாக சட்டத்தரணி சேனசிங்க மேலும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 25-ம் திகதி நடக்கவுள்ளன.

'மக்கள் குடியிருப்புக்கு 3 ஏக்கர், டாட்டாவுக்கு 4 ஏக்கர்'

நகர அபிவிருத்து அதிகாரசபை

கொம்பனித் தெரு: மக்கள் குடியிருப்புக்கு 3 ஏக்கர், டாட்டாவுக்கு 4 ஏக்கர்

இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் துணை இயக்குநர் பிரசாத் ரணவீர செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இதேவேளை, குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் நலன்கருதியே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் துணை இயக்குநர் பிரசாத் ரணவீர பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

மக்களால் தாமாகவோ அல்லது தமது அதிகாரசபையாலோ குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கான செலவை ஏற்கமுடியாது என்பதால் இந்தியாவின் டாட்டா நிறுவனத்திடம் அபிவிருத்தி வேலையை ஒப்படைத்துள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் துணை இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

மூன்று ஏக்கர் பரப்பில் மக்களுக்கு வசதியான குடியிருப்பு தொகுதிகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்றும் நான்கு ஏக்கர் பரப்பு டாட்டா நிறுவனத்துக்கு ஏற்படுகின்ற செலவுக்காக அந்த நிறுவனத்துக்கு குத்தகையில் கொடுக்கப்படும் என்றும் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியுமென்றும் அதுவரை அப்பிரதேச மக்களின் மாற்றுக் குடியிருப்புகளுக்காக வாடகைப் பணத்தை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை நீதிமன்ற உத்தரவுப்படி, பிரதேச மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தமிழோசையிடம் தெரிவித்தது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.