
பணிநீக்கம் செய்யப்பட்ட சண்டே லீடரின் ஆசிரியர் ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ்
இலங்கையின் மிகப் பிரபலமான, அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வாரப் பத்திரிகையான சண்டே லீடர் இதழின் ஆசிரியர் ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தப் பத்திரிகையின் புதிய உரிமையாளர் பத்திரிகையின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு அவரை வலியுறுத்தியதாகக் கூறப்படுவதை அடுத்து இந்தத் திருப்பம் வந்திருக்கிறது.
இந்தப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மூன்றாண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சண்டே லீடர் பத்திரிகை எப்போதுமே சர்ச்சையிலிருந்து தூர நின்றதில்லை.
2009-இலிருந்து அதன் ஆசிரியராக இருந்து வந்திருக்கும் ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ் தான் ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து வெளிப்படையாகவே பேசுகிறார்.
மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஒருவர் இந்தப் பத்திரிகையின் பங்குகளில் 72 சதவீதத்தை வாங்கிய பின்னர், ராகபக்ஷ தரப்பினரை விமர்சிக்கும் கட்டுரைகளையோ அல்லது செய்திகளையோ வெளியிடுவதை நிறுத்துமாறு தனக்கு உத்தரவிட்டதாக
ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ் கூறுகிறார்.
அசங்க செனவிரட்ன என்ற அந்த புதிய உரிமையாளர், தான் எழுதும் பாணியை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு தன்னிடம் கூறியதாக ஜான்ஸ் கூறினார்.
அதை ஏற்க தான் மறுத்ததாலேயே தனக்கு வழங்கப்பட்ட பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இது குறித்து கருத்து கேட்க அசங்க செனவிரட்னவை தொடர்பு கொள்ள முயன்றும் முயற்சி பலனளிக்கவில்லை.
அரசாங்கம் தனக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் மூலம் ஒரு செல்வாக்கான பத்திரிகையின் குரல்வளையை நெரிக்கும் ஒரு முயற்சியாக இதனைக் கருதுவதாக ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
'பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது'

முன்னாள் சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் கொலையாளிகள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை
இலங்கையில் இறுதியாக எஞ்சியிருக்கும் ஒரே ஒரு சுதந்திர ஆங்கில பத்திரிகையை நசுக்க முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.
'நாங்கள் அரசின் ஆதரவுப் பத்திரிகையாக இயங்கவில்லை. நாங்கள் சுதந்திரமான ஒருநிலைப்பாட்டை எடுத்து வந்தோம். நாங்கள் சும்மா அரசுக்கு தொந்தரவு தந்த ஒரு பத்திரிகை அல்ல, அதை விட ஒரு பெரிய பங்கை ஆற்றினோம். எனவே. புதிய உரிமையாளரைப் பயன்படுத்தி சண்டே லீடர் பத்திரிகையின் குரலை நசுக்கியிருக்கின்றனர்' என்றார் ஜான்ஸ்.
சண்டே லீடர் பத்திரிகை அரசாங்கத்தின் தில்லுமுல்லுகளைப் பற்றி தொடர்ந்து விடாப்பிடியாக கண்காணித்து எழுதிவரும் பத்திரிகை என்ற பெயர் பெற்றிருந்தது.
போரின் இறுதிக்காலத்தில், சண்டே லீடரின் அப்போதைய ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு முகமூடி மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட போது இந்த பத்திரிகை மிகப் பிரபலமானது.
ஆனால் ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ் கடந்த ஆண்டு அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சி அரசியல்வாதியான முன்னால் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராகவும், பொன்சேகா கொடுத்த சர்ச்சைக்குரிய பேட்டி தொடர்பான நீதிமன்ற வழக்கொன்றில் சாட்சியமளித்திருந்தார் .
ஆனால் கடந்த ஜூலையில் ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோட்டாபய ராஜபக்ஷ, தொலைபேசி மூலம் தன்னை அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி வசைபாடினார் என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இலங்கையில் பெரும்பாலான பத்திரிகைகள் அரசாங்கத்தின் பதிலடிக்கு பயந்து தங்களைத் தாங்களே சுய தணிக்கை செய்துகொள்கின்றன.
இப்போது சண்டே லீடர் பத்திரிகை என்ன விதமான ஒரு அணுகுமுறையை மேற்கொள்ளப்போகிறது என்பது குறித்து ஊடக உரிமைகள் குறித்த செயல்பாட்டாளர்கள் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.







