'காணாமல்போனோர் பற்றி சுதந்திரமான விசாரணை வேண்டும்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 ஆகஸ்ட், 2012 - 10:33 ஜிஎம்டி
சர்வதேச காணாமல்போனோர் தினம்- வவுனியா போராட்டம்

சர்வதேச காணாமல்போனோர் தினம்- வவுனியா போராட்டம்

இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஐநாவின் நடவடிக்கைக் குழுவின் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட நிகழ்விலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐநாவின் நடவடிக்கை குழு காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களைச் சந்தித்துப் பேசுவதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

காணாமல்போனோரின் குடும்பத்தினர், காணாமல் போனோரைத் தேடியறியும் குழு, மனித உரிமைகள் இல்லம், மன்னார் பிரஜைகள் குழு உட்பட பல்வேறு அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பெரும் எண்ணிக்கையான பெண்கள் தமது கணவர்மாரையும். பிள்ளைகளையும் விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று அழுது அரற்றி கண்ணீர்விட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வவுனியா பேரூந்து நிலையத்திற்கு எதிரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காணாமல்போயிருப்பவர்களின் நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷமிட்டு கோரிக்கை எழுப்பினார்கள்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் காட்டிவருகின்ற அக்கறையற்ற போக்கைக் கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் காணாமல்போனவர்களின் புகைப்படங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தார்கள்.

தமது உறவுகளை கண்டுபிடித்துத்தருமாறு பெண்கள் கண்ணீர்

தமது உறவுகளை கண்டுபிடித்துத்தருமாறு பெண்கள் கண்ணீர்

ஆர்ப்பாட்டத்தையடுத்து வவுனியா கலாசார மண்டபம் வரையில் சென்ற பேரணியின் முடிவில் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பலரும் உரையாற்றினார்கள்.

ஆட்கள் காணாமல்போயுள்ளமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்று அதற்குரிய தீர்வை வழங்க வேண்டும் என்று இங்கு உரையாற்றிய பலரும் வலியுறுத்தினார்கள்.

வவுனியா நிகழ்வுகள் முழுக்கவும் அரசு சார்பற்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளாக நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

மக்கள் கண்காணிப்பு குழு பங்கேற்கவில்லை

இனவாத அரசியல் நோக்கங்களுக்காக கடத்தப்பட்ட பெருந்தொகையான தமிழர்களின் குடும்ப உறுப்பினர்களின் சார்பாக அரசாங்கத்திற்கு கடுமையான செய்தி ஒன்றை இந்த கால கட்டத்தில் விடுப்பதற்கு இந்த அரசு சார்பற்ற நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதை எம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்பதற்காக இந்த நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதில்லை என மக்கள் கண்காணிப்பு குழுவின் இணைத்தலைவர் சிறிதுங்க ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் ஆதரவளித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்த அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவைச் சேர்ந்த மகேந்திரன் பதிலளிக்கையில், தமது குழு காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்காகப் பாடுபட்டு வருவதாகவும் இந்த நிகழ்வில், சிறிதுங்க ஜயசூரிய கூறியிருப்பதைப் போன்று தமக்கு வேறு உள்நோக்கம் எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் மனோ கணேசன் போன்றவர்களுக்கே இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக பதிலளித்துள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.