
பல இடங்களில் இன்னும் முழுமையாக கண்ணிவெடி அகற்றப்படவில்லை
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் கைவிடப்பட்ட வெடிப்பொருள் ஒன்று இன்று காலை வெடித்ததில் யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்த தியாகராஜா யோகசீலன் என்ற 29 வயதுடைய இளைஞன் காயமடைந்திருக்கின்றார்.
வெடித்துச் சிதறிய துண்டுகள் பாய்ந்ததில் இரண்டு தொடைகளிலும் காயமடைந்து இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். கிளிநொச்சியில் உள்ள ஐநா நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வருகின்றார்.
அவர் வசித்து வருகின்ற வீட்டின் முற்றத்தைக் கூட்டி குப்பைகளை எரித்தபோது குப்பையுடன் கிடந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற இனந்தெரியாத வெடிப்பொருள் ஒன்று வெடித்தனாலேயே இவர் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கனகாம்பிகைக்குளம் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அந்தப் பிரதேசம் பாதுகாப்பானது என அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அங்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.

கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் பெண்கள்
இந்த நிலையிலேயே இன்று இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள பகுதியிலும் இத்தகைய வெடிப்பொருட்கள் கிடந்து வெடிப்பது குறித்து மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மத்தியில் கவலையும் அச்சமும் ஏற்பட்டிருக்கின்றது.
இது குறித்து கருத்து வெளியிட்ட யாழ் பிராந்திய மிதிவெடிச்செயற்பாட்டு அலுவலக அதிகாரி வரதராஜா முருகதாஸ் அவர்கள் வெடிக்காத வெடிபொருட்களை முற்று முழதாக அகற்றக் கூடிய ஒரு பொறிமுறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதனால் இத்தகைய ஆபத்துக்கள் இருப்பது குறித்து மீள்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக மிதிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஆபத்தான பணி
குப்பைகளுக்குள் கிடந்து வெடிக்கின்ற வெடிப்பொருட்களை முன்கூட்டியே கண்டறிவது கஷ்டமான காரியமாகும் எனவும் குப்பைகளை மாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத போது எரிக்க வேண்டும் எனவும் முருகதாஸ் சுட்டிக்காட்டுகிறார்.
குப்பையை எரிக்கும் போது 100 அல்லது 200 மீட்டர் தொலைவில் இருந்தே எரிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்குத் தாங்கள் அறிவுறுத்தியிருப்பதாகக் அவர் கூறினார்.
யுத்தம் நடைபெற்ற பிரதேசமாகிய வடபகுதியில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்களை அகற்றும் பணி சிரமங்களும் ஆபத்தும் மிகுந்ததுடன் தாமதமிக்க பணியாகும் என்று அரசாங்கமும், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.







