
இலங்கையின் கிழக்கு மாகாண சபையைக் கலைப்பதற்கு அந்த மாகாண முதலமைச்சர் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று போடப்பட்ட மனுவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாகாணத்தில் தேர்தலை நடத்துவதற்கும், தேர்தல் ஆணையாளருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ராசையா துரைசிங்கத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னால் அது கலைக்கப்படக்கூடாது என்று சபை ஏகமனதாக கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றிய தீர்மானத்தை அந்த மனு சுட்டிக்காட்டியிருந்தது.
மாகாண சபையைக் கலைக்க பரிந்துரைக்கும் அதிகாரம் அந்த மாகாண முதலமைச்சருக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டு நீதிபதிகள் இந்த மனுவை நிராகரித்ததாக, மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வழக்குரைஞர்,அத்துல டி சில்வா, கூறினார்.







