BBC navigation

நிமலரூபனின் உடலை நிபந்தனையுடன் ஒப்படைக்க உத்தரவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 ஜூலை, 2012 - 13:11 ஜிஎம்டி
'கொல்லப்பட்ட நிமலரூபனின் இறுதிச்சடங்கினை வவுனியா எஸ்எஸ்பி-இன் கண்காணிப்பில் நடத்தவேண்டும்'

'கொல்லப்பட்ட நிமலரூபனின் இறுதிச்சடங்கினை வவுனியா பொலிஸ் எஸ்எஸ்பி-இன் கண்காணிப்பில் நடத்தவேண்டும்'

வவுனியா சிறைச்சாலைப் போராட்டத்தை தொடர்ந்து அனுராதபுரம் சிறைக்கும், அதன்பின்னர் மகர சிறைக்கும் மாற்றப்பட்டிருந்த நிலையில் அடிகாயங்களுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள தமிழ்க் கைதி நிமலரூபனின் சடலத்தை வவுனியாவில் அடக்கம் செய்வதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.

நிமலரூபனின் இறுதிச்சடங்குகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதவாறு வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்(எஸ்எஸ்பி) கண்காணிப்பின்கீழ் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரிலேயே இந்த அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

நிமலரூபனின் சடலத்தை மகர பிரதேச எல்லைக்குள் தான் அடக்கம் செய்யவேண்டும் என்று மகர நீதவான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

எனினும் தமது மகனின் சடலத்தை தமது சொந்த ஊரான வவுனியாவில் தான் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நிமலரூபனின் பெற்றோர் தாக்கல்செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் சாலிய பீரிஸ் பிபிசியிடம் கூறினார்.

இன்று சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் நீதிமன்றச் செயற்பாடுகள் முடங்கியிருக்கும் நிலையிலும், இந்த குறித்த மனுவை விசேட காரணம் கருதி, நீதிபதியின் பணிபீடத்தில் வைத்தே நீதிபதி விசாரித்ததாக சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

இதன்போது, அரச தரப்பு சட்டத்தரணி முன்வைத்த நிபந்தனைகளுக்கு நிமலரூபனின் பெற்றோர் இணங்கியதை அடுத்து, அவரது சடலத்தை எதிர்வரும் 23-ம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உச்சநீதிமன்றம் மகர நீதவான் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.