'கோமா நிலையில் உள்ள கைதி யாழ்.பாஷையூரை சேர்ந்தவர்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 ஜூலை, 2012 - 16:34 ஜிஎம்டி
வவுனியா சிறைச்சாலை சம்பவத்தின் பின்னர் தென்னிலங்கை சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்

'வவுனியா சிறைச்சாலை சம்பவத்தின் பின்னர் தென்னிலங்கை சிறைகளுக்கு மாற்றப்பட்ட தமிழ்க் கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்'

இலங்கை ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற டில்ருக்ஷன் என்ற தமிழ் அரசியல் கைதி பாஷையூரைச் சேர்ந்தவர் என மற்றுமொரு குடும்பத்தினர் இப்பொழுது உரிமை கோரியிருக்கின்றனர்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் டில்ருக்ஷன் என்பவரும் ஒருவர்.

இந்தச் சிறைச்சாலையில் 3 சிறைக்காவலர்களை பிடித்துவைத்து கைதிகள் நடத்திய போராட்டம் முப்படைகளின் துணைகொண்டு கடந்த மாத இறுதியில் அடக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த அரசியல் கைதிகள் அனுராதரபுரத்திற்கும் தென்னிலங்கையின் வேறு சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர்.

அதனையடுத்து வவுனியா சிறைச்சாலையும் இழுத்து மூடப்பட்டது.

இடம்மாற்றப்பட்ட கைதிகள் அடித்து தாக்கப்பட்டு, மஹர சிறைச்சாலையிலும் மஹர சிறைச்சாலை வைத்தியசாலையிலும் ராகம அரசினர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தாக மஹர சிறைச்சாலைக்கு நேரில் சென்றுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அதன்பின்னர், றாகம வைத்தியசாலையில் டில்ருக்ஷன் என்ற கைதி கோமா நிலையில் இருப்பதை மன்னார் இலுப்பைக் கடவையைச் சேர்ந்த தாயொருவர் செய்திகளில் அவதானித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன தனது மகன் தான் அவர் என்று கடந்த சனிக்கிழமை அதிகாரிகளிடம் அடையாளம் அந்தத் தாய் அடையாளம் காட்டியிருந்தார்.

டில்ருக்ஷனின் தலை மொட்டையடிக்கப்பட்டு, புருவங்களும் இருந்தது என்று மன்னார் இலுப்பைக்கடவையைச் சேர்ந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்த தகவலை செய்தித்தாளில் கண்ட பாஷையூரைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மரியதாஸ் நேவிஸ் என்ற தந்தை, டில்ருக்ஷன் தனது மகன் தான் என்று இப்போது அடையாளம் காட்டியிருக்கின்றார்.

கடந்த 2009-ம் ஆண்டு தனது மகன் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியா சிறைச்சாலை அசம்பாவித சம்பவத்திற்கு முன்னர் அடிக்கடி அங்கு சென்று தனது மகனை பார்த்து வந்திருந்ததாகவும் கிறிஸடோபர் மரியதாஸ் நேவிஸ் தமிழோசையிடம் கூறினார்.

வவனியா சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அங்கு சென்று வந்த அருட்தந்தை ஜோன்சன் அவர்களும் ராகமை வைத்தியசாலையில் உள்ள டில்ருக்ஷன் யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.