
நிமலரூபன்
இலங்கையின் வடக்கே வவுனியா சிறைச்சாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தனது மகனை றாகம வைத்தியசாலையில் சடலமாகவே கண்டதாக உயிரிழந்துள்ள கணேசன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாராகிய 63 வயதுடைய கணேசன் இராஜேஸ்வரி தெரிவித்திருக்கின்றார்.
மகன் சுகமில்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கின்றார் எனக் கூறி அவரைப் பார்ப்பதற்காக இராஜேஸ்வரியையும் அவரது கணவனையும் பொலிசார் கடந்த புதன்கிழமை றாகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆயினும் மிகுந்த தாமதத்தின் பின்னர் மறுநாள் வியாழக்கிழமையே நிமலரூபனின் சடலம் அவருடைய பெற்றோருக்குக் காட்டப்பட்டுள்ளது.
'சடலமாக கிடந்த என் பிள்ளைக்கு கையும் காலும் முறிந்திருந்தது. கையிலும், நெஞ்சிலும் தலையிலும் அடிகாயங்கள் இருந்தன." என்றார் இராஜேஸ்வரி.
"பிரேதத்தை காட்டியவுடன் கையெழுத்து போடும்படி சிறை அதிகாரிகள் எங்களை வற்புறுத்தினார்கள். ஆனால் நாங்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டோம். என் மகனுடைய மரணத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளே பொறுப்பு," என்றார் அவர்.
இறந்தவரின் உடலை வவுனியாவுக்குக் கொண்டு சென்றால் அங்கு அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க மகர பிரதேசத்திற்கு வெளியில் இறுதிக்கிரியைகளுக்காக அந்த சடலத்தைக் கொண்டு செல்லக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"ஒரே மகனுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பியிருந்தோம். அது இனி இல்லை. அவனது இறுதிக்கிரியைகளையாவது வீட்டில் வைத்துசெய்ய வேண்டும்" என்றனர் நிமலரூபனின் பெற்றோர்.
இந்நிலையில் நிமலரூபனின் சடலத்தை தமது சொந்த இடமாகிய வவுனியா நெளுக்குளத்திற்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கணேசன் ராஜேஸ்வரி பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியின் விரிவான ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.
"காவல்துறையினர் எங்களை தடுத்து வைத்து மிரட்டினார்கள்"
இலங்கையில் தடுப்புக் காவலில் இறந்த நிமலரூபனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுசெல்லக்கூடாது என்று காவல்துறையினர் தங்களை தடுத்து வைத்து மிரட்டியதாக அவருடைய தாயார் ராஜேஸ்வரி பிபிசி தமிழோசையிடம் கூறினார்
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்








