BBC navigation

சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலையானார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 2012 - 10:11 ஜிஎம்டி
சரத் பொன்சேகா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார்

சரத் பொன்சேகா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார்

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருமான சரத் பொன்சேகா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை முன்றலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அரசியல் பிரமுகர்களும் கூடிநின்று அவரை வரவேற்றுள்ளனர்.

பட்டாசு வெடிகள் கொளுத்தப்பட்டு, அந்தப் பிரதேசமே பொன்சேகா ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்ததாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய தயார் என ஜனாதிபதி கடந்த வாரம் அறிவித்தார்.


இன்று திங்கட்கிழமை மதியம், சரத் பொன்சேகாவை வரவேற்பதற்காக மருத்துவமனை முன்றலில் கூடிநின்ற அவரது ஆதரவாளர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி பெரும் ஆரவாரத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.


குறித்த பிரதேசம் முழுவும் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களாலும் ஊடகவியலாளர்களாலும் எதிரணி அரசியல் தலைவர்களாலும் நிரம்பியிருந்ததாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.


சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட முன்னதாக, சரத் பொன்சேகா நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.


இதேவேளை, சரத் பொன்சேகா தனக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தீர்ப்புகளை எதிர்த்து தாக்கல் செய்திருந்த இரண்டு மேன்முறையீட்டு மனுக்களையும் நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.


'வெள்ளைக் கொடி' வழக்கு விவகாரத்தில் அளிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்புக்கு எதிராகவும், முறையற்ற இராணுவ தளபாட கொள்வனவு குற்றச்சாட்டு தொடர்பாக இராணுவ நீதிமன்றம் அளித்திருந்த இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்புக்கு எதிராகவும் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை சரத் பொன்சேகா தரப்பு வாபஸ் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான சட்ட ஆவணங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்கனவே கையொப்பமிட்டிருப்பதாக கூறப்பட்டது.


நீதிமன்ற நடைமுறைகளை முடித்துக் கொள்வதற்காகவே அவரது விடுதலையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா தரப்பு பிரதிநிதிகள் முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.