தமரா குணநாயகம் ஐநா தூதுவர் பதவியை இழக்கிறார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 மே, 2012 - 15:51 ஜிஎம்டி
ஐநா தூதுவர் பதவியிலிருந்து தான் வெளியேற்றப்படக் கூடாது என்று தமரா குணநாயகம் முன்னதாக தெரிவித்திருந்தார்

ஐநா தூதுவர் பதவியிலிருந்து தன்னை வெளியேற்றக்கூடாது என்று தமரா குணநாயகம் முன்னதாக தெரிவித்திருந்தார்

ஜெனிவாவிலுள்ள ஐநாவுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி பதவியிலிருந்து தமரா குணநாயகம் நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவராக இருக்கின்ற ரவீநாத ஆரியசிங்க நியமிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

தமரா குணநாயகம் கியூபாவுக்கான தூதுவராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.

9 மாதங்களுக்கு முன்னர் கியூபாவிலிருந்து இடமாற்றம் பெற்று ஐநாவின் ஜெனீவா அலுவலகத்துக்கு இலங்கைத் தூதுவராக அனுப்பப்பட்ட தமரா குணநாயகம், இப்போது மீண்டும் பழைய பதவிக்கே திருப்பியனுப்பப்படுகிறார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுடன் தமரா குணநாயகம் முரண்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கியூபாவுக்கு திருப்பியனுப்பப்படும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமரா குணநாயகம் வரும் ஜூலை மாதத்திலிருந்து ஜெனீவா பதவியை இழக்கிறார்.

இலங்கை அரசாங்கம் போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளை ஒழுங்காக முன்னெடுக்க வேண்டுமென்று விலியுறுத்தியும் இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் குறித்த அதிருப்திகளை சுட்டிக்காட்டியும் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னணியிலேயே தமரா குணநாயகம் ஜெனிவாவிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

வெளியுறவுத் துறைக்குள் பிளவு?

தமரா குணநாயகம் பதவியை இழக்க நேரிடும் என்று பரவலான ஊகங்கள் வெளியாகியிருந்தன. அந்த பின்னணியில், தான் தொடர்ந்தும் பதவியிலிருக்க விரும்புவதாக வெளியுறவு அமைச்சருக்கு அவர் கடிதமொன்றையும் எழுதியிருந்தார். இந்த விவகாரத்தில் சற்று காட்டமான ஊடக செவ்வியையும் அவர் வழங்கியிருந்தார்.

'வெளிநாட்டுத் தூதரங்களில் இருக்கின்ற ஒருசில தமிழர்களையும் நீக்கிவிடுவது என்பது, இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளையே கேள்விகுட்படுத்திவிடும்' என்று தமரா குணநாயகம் பிபிசியிடம் விசனம் தெரிவித்திருந்தார்.

'இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் மோதல் நடக்கிறது என்று கூறிவருபவர்களின் கைகளிலேயே நாங்கள் விழுந்துவிடுவோம்' என்று கருதுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தான் இடமாற்றப்பட மாட்டேன் என்பதற்கான உத்தரவாதத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியிருப்பதாகவும் தமரா நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அவர் ஜாநா தூதுவர் பதவியை இழக்கிறார்.

இந்த இடமாற்றம் வழமையான தூதுவர்கள் ஒழுங்கமைப்பின்படிதான் நடக்கிறது என்றும் ஜெனீவா தீர்மான விவகாரத்துக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்றும் வெளியுறவு அமைச்சின் செயலாளர் கூறியிருக்கிறார்.

ஆனால் இலங்கையின் வெளியுறவுத்துறைக்குள் பிளவுகள் நிலவுவதாகவும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் மற்றவர்களை ஓரங்கட்டுவதாகவும் அவதானிகள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த மாதத்தில் பிரான்ஸிலிருக்கின்ற தூதுவர் தயான் ஜயதிலக்கவும் வெளியுறவு அமைச்சின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்.

தான் தூதுவருக்கான தகைமையைக் கடந்து செலவுகள் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் மிரட்டியதாகவும் அதனால் தான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தயான் ஜயதிலக்க விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.