bbc.co.uk navigation

சுனாமி அச்சம்:கிழக்கிலங்கையில் ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறினர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 ஏப்ரல், 2012 - 13:19 ஜிஎம்டி

இந்தோனேஷியாவின் அச்சே மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தை அடுத்து, இலங்கையில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக நாட்டின் பல பகுதிகளில் சுனாமி தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தன.

கிழக்கு மாகாணத்தின் கடலோர பிரதேசங்களிலும் சுனாமி தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு, பேரிடர் மேலாண்மை நிலையத்தால் இன்று( புதன்கிழமை) பிற்பகல் விடுக்கப்பட்டதையடுத்து கடலோரப் பிரதேச மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பொத்துவில் தொடக்கம் வாகரை வரையிலான கடலோர கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் உட்பட பல பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அவசரநிலை பிரகடனம்

மூடப்பட்டுள்ள பாடசாலைக்கு வெளியே கூடிய மக்கள்-மட்டக்களப்பு

கிழக்கு மாகணாத்தின் கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு வந்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சுற்றுலா விடுதி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர கிராமங்களில் வீடுகள் தற்போது வெறிச்சோடிக காணப்படகின்றது. எனினும் பொதுமக்களின் உடமைகளின் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே ஆண்கள் நடமாடுவதை காணக்கூடியதாக உள்ளது என்று எமது செய்தியாளர் கூறுகிறார்.

இலங்கையில் தற்போது முதலாம் தவனை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சுனாமி அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து வெளியேறிய மக்கள், பாடசாலைகளுக்கு முன்பாகவும், வீதியோரங்களிலும் நிற்கும் சூழலை காண முடிகிறது என்றும் எமது செய்தியாளர் உதயகுமார் கூறுகிறார்.

காத்தான்குடி மருத்துவமனையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்படும் ஒருவர்

வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதே வேளை இன்று பிற்பகல் சுமார் 2.20 மணியளவில் கிழக்கின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்

இதன் காரணமாக மக்களிடையே ஒரு வித அச்ச நிலை காணகாணப்படுகின்றது என்று கிழக்கிலங்கைத் தகவல்கள் கூறுகின்றன

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.