
இலங்கையில் எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விலையேற்றத்தைக் கண்டித்துள்ள மன்னார் மாவட்ட விவசாயிகள், எரிபொருள் விலையேற்றத்தினால் ஏற்பட்டுள்ள செலவின அதிகரிப்பை சமாளிப்பதற்காகத் தங்களுக்கும் மானியம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி பேரணி நடத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்ட விவசாயிகள் சம்மேளனம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
மன்னார் நகர வீதி வழியாகப் பேரணியில் சென்ற விவசாயிகள் ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் மரியதாசன் பரமதாசனிடம் கையளித்துள்ளனர்.
முன்னர் 1000 ரூபாயாக இருந்த விவசாயத் தொழிலாளியின் சம்பளம் எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, 1200 ரூபாயாக அதிகரித்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அறுவடை மற்றும் சூடு மிதிப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்ற இயந்திரத்தின் வாடகைக் கூலி 6000 ரூபாயிலிருந்து இப்போது 8000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கேற்ப நெல்லின் விலை உயர்த்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள் அறுவடை காலமாகிய இப்போது தாங்கள் பெரும் நட்டத்திற்கும் சிரமங்களுக்கும் ஆளாகியிருப்பதாகவும் தமது மகஜரில் தெரிவித்துள்ளனர்.
எனவே, எரிபொருள் விலையேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்குவதற்காக மீனவர்களுக்கு வழங்கப்படுவது போன்ற எரிபொருள் மானியம் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்தைக் கைவிட வேண்டும் எனக்கோரி, மன்னார், புத்தளம் மற்றும் தென்பகுதி மீனவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள்.
மண்ணெண்ணெயின் விலை கிட்டத்தட்ட 50 வீதமாக, லிட்டர்ர் ஒன்றுகு 35 ரூபாய்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதனால், பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் இருந்து வருகின்றார்கள்.
இதனால், சந்தைகளில் கடலுணவு வகைகளுக்குத் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








