bbc.co.uk navigation

மக்களை போராட அழைக்கும் இலங்கை அரசு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 பிப்ரவரி, 2012 - 13:55 ஜிஎம்டி
இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸ

இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸ

இலங்கைக்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் சதி செய்வதாக குற்றஞ்சாட்டி அவற்றுக்கு எதிராக இலங்கை மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்க அமைச்சர் ஒருவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கையின் வீடமைப்புத்துறை அமைச்சரான விமல் வீரவன்ஸ அவர்களே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் ஒழித்ததை விரும்பாத மேற்கத்தைய நாடுகள் அதற்காக இலங்கை ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், இராணுவத்தினரையும் தண்டிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அமைச்சரவை பேச்சாளரான லக்ஷ்மன் யாப்ப அபேவர்த்தன, சக்தி, வலு அமைச்சரான சம்பிக ரணவாக்க மற்றும் பெட்ரோலிய அமைச்சரான சுசில் பிரேமஜயந்த ஆகியாரும் சமூகமளித்திருந்தனர்.

மேற்கு நாடுகளுக்கு தமது எதிர்ப்பை காண்பிக்கும் வகையில், ஐநா மனித உரிமைக் கவுன்ஸிலில் கூட்டம் ஆரம்பமாகும் தினத்தில் இலங்கையின் அனைத்து நகரங்களிலும் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரான திஸ்ஸ அத்தநாயக்க அவர்கள், இந்த பிரச்சினைகளுக்கு போராட்டங்களின் மூலம் தீர்வு காண முடியாது என்றும் அவற்றை சர்வதேச சமூகத்துடன் அரசாங்கந்தான் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய இந்த அமைச்சர்கள் அண்மையில் பெட்ரோலிய விலையேற்றத்தை கண்டித்து பல இடங்களில் நடந்த போராட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்பட்ட சதி என்று விபரித்துள்ளனர்.

இந்த போராட்டங்களால், சிலாபம் மற்றும் நீர்கொழும்பில் பல மக்கள் பாதிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.