
காத்தான்குடி
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட மாணவிகள் இருவரும் குற்றமற்றவர்கள் என்று தற்போது பள்ளிவாசல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் ஆபாசப் படம் பார்த்ததாக குற்றஞ்சாட்டிய ஒரு கும்பல் அவர்களை தாக்கி, பள்ளிவாசல்களில் அவர்களைப் பற்றிய அறிவிப்புக்களையும் வெளியிட்டதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், அந்த மாணவிகள் இருவரும் எந்தவிதமான தவறும் இழைக்கவில்லை என்றும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் தற்போது காத்தான்குடி பள்ளிவாசல்களில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு , பள்ளிவாசல்கள் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தை அடுத்தே இந்த அறிவிப்பு பள்ளிவாசல்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் அந்த மாணவிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் அமைப்புக்கள் அவர்களிடம் மனம் வருந்துவதாகவும் அந்த அறிவித்தலில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தை சேர்ந்த சுபைர் அவர்கள் கூறும் போது, மனித உரிமைகள் அமைப்புக்கள் கேட்டதற்கு ஏற்ப, அவதூறுக்கு உள்ளான அந்த மாணவிகள் குற்றமற்றவர்கள் என்பதை தாம் மீண்டும் பள்ளிவாசல்களில் அறிவித்ததாக பிபிசியிடம் கூறினார்.
அத்துடன் அந்த மாணவிகளை தாக்கி அவமானப்படுத்தியவர்கள் மீது நீதிமன்ற வழக்கு நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








