bbc.co.uk navigation

சரத் பொன்சேகாவின் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 பிப்ரவரி, 2012 - 15:23 ஜிஎம்டி
சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையலடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது விடுதலையை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் புதன்கிழமை எதிரணியினர் இணைந்து போராட்டமொன்றை நடத்தினர்.

கொழும்பு உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிரான கோசத்துடன், சரத் பொன்சேகா அடைத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

பேரணியாகச் சென்றவர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய முன்னாள் தளபதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாகவும் போரை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவத் தளபதி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கோசம் எழுப்பினர்.

சரத் பொன்சேகாவை உடனடியாக அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென்றும் அவர் எக்காரணத்திற்காகவும் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்றும் அவரது மனைவி அனோமா பொன்சேகா ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவை இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த அரசியல் கைதிகளின் அடையாளமாகப் பார்ப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அங்கு தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் தேசிய மட்டத்திலான இயக்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டுமென்றும் மனோ கணேசன் மேலும் கூறினார்.

இதேவேளை, வெள்ளைக்கொடி விவகாரம் என்று கூறப்படுகின்ற வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட மூன்றாண்டு கால சிறைத் தண்டனையை எதிர்த்து சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.