
டோகோவில் தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த பகுதி
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் தடுப்பு முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கைத் தமிழர்கள், நாடு திரும்புமாறு தங்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
கனடாவுக்கு அழைத்துச் செல்வதாகக்கூறி இலங்கையிலிருந்து சட்டவிரோத முகவர்களினால் கூட்டிச்செல்லப்பட்ட இவர்கள் டோகோவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
வீசா காலாவதியான நிலையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இவர்கள் அனைவரும் டோகோ படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த மாதம் முதற்கட்டமாக 9 பேர் நாடு திரும்பியிருந்த நிலையில் தொடர்ந்தும் 19 பெண்கள் 11 குழந்தைகள் உட்பட 200 பேர் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 3 பெண்கள் உட்பட 28 பேர் கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பினர்.

டோகோவில் நிர்க்கதியான தமிழர்கள்
இறுதியாக தனது மகளுடன் நாடு திரும்பிய மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது தாயொருவர் இலங்கை திரும்புமாறு சர்வதேச புலம்பெயர்தோருக்கான அமைப்பு மற்றும் ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் உட்பட எந்தவொரு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்.
சொந்த விருப்பத்தின் பேரிலேயே தானும் மகளும் நாடு திரும்பியதாக அவர் கூறினார்.
டோகோ நாட்டு அதிகாரிகளினால் கௌரவமாகவே தாங்கள் நடத்தப்பட்டதாக ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் கூறினார்.
தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த காலத்தில் இராணுவ வீரர்களின் கண்காணிப்பில் இருந்த தங்களுக்கு வெளியியில் நடமாடகூட ஆரம்பத்தில் அனுமதியளிக்கப்பட்டதாகவும் பின்னர் நான்கு பேர் தப்பிச்சென்றதையடுத்தே அந்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை திரும்பியபோது குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகளும் புலனாய்வுத் துறையினரும் விசாரணை மேற்கொண்டு விபரங்களைப் பெற்ற பின்னர் சட்டவிரோத பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்








