
'அரச கொள்வனவு நிறுவனங்கள் தாமதமாவதால் வங்கிக்கடன்களை செலுத்தமுடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்'
இலங்கையின் வடக்கில், மீள்குடியேற்றப் பகுதிகளில் இம்முறை நெல்விளைச்சல் அறுவடை ஆரம்பமாகி சில வாரங்கள் கடந்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை நியாய விலைக்கு விற்கமுடியாமல் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய அரசின் நிறுவனங்கள் தாமதமாகிவருவதால் தனியாருக்கு குறைந்த விலையில் விற்று நட்டமடைய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டில் வீடுகளில் வசிக்கின்ற தங்களுக்கு, அரசு கொள்வனவு செய்யும்வரை நெல்லைப் பதப்படுத்தி சேமித்து வைப்பதற்கு வசதிகளில்லை எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'மீள்குடியேற்ற கொட்டில் வீடுகளில் வாழும் விவசாயிகளுக்கு நெல்லை பதப்படுத்தி களஞ்சியப்படுத்தும் வசதிகளும் இல்லை'
இதேவேளை அரசின் விவாய திணைக்களத்தால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள நெல் வகைகளுக்கு சந்தை வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகவும், சிபாரிசு செய்யப்பட்டிருக்காத நெல் வகைகளுக்கே கூடுதல் சந்தை வாய்ப்புகள் இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
வன்னியிலுள்ள நெல் விவசாயிகள் கோரும் விலை நியாயமானது என்று ஒப்புக்கொள்ளும் வெளிமாவட்ட நெல் வியாபாரிகள், நெல்லின் விலையை அரிசி ஆலைக்காரர்களே நிர்ணயம் செய்வதாகவும் அவற்றில் தம்மால் தலையிட முடியாது என்றும் தமிழோசையிடம் கூறினர்.
இதுதொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கேட்டபோது, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள நியாய விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்யுமாறு நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.








