bbc.co.uk navigation

பொலிஸ் தாக்கியதில் சந்தேக நபர் மரணமா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 பிப்ரவரி, 2012 - 15:54 ஜிஎம்டி
கைவிலங்கு

கைவிலங்கு

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அட்டாளச்சேனைப் பகுதியில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர் சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளதை அடுத்து கைதுசெய்யப்பட்டவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வீதிகளில் இறங்கி பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அட்டாளச்சேனை பிரதேசத்திலுள்ள கோணாவத்தை கிராமவாசியான 40 வயதுடைய உதுமான் லெப்பை மௌஜூன் என்பவர் நீதிமன்றத்தில் கைதிகள் கூண்டில் நின்றபோது மரணமடைந்தமை தொடர்பாக உறவினர்களும் உள்ளுர் மக்களும் பொலிசார் மீது சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவததையடுத்து கோணாவத்தை கிராமத்தில் ஏற்பட்ட பதட்ட நிலை காரணமாக அங்கு மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் சமய நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக அட்டாளச்சேனை பிரதேச சபை உறுப்பினரான சுலைமான் லெப்பை முனாஸ் தெரிவித்துள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் கூட்டிய கூட்டமொன்றில், இப்பகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற உத்தரவாதம் வழங்கியதாக அவர் கூறினார்.

இந்த மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் உத்திரவாதம் வழங்கியதாக பிரதேச சபை உறுப்பினர் குறிப்பிட்டார்.

பொலிசாரின தாக்குதலில் இவர் மரணமடைந்துள்ளதாக உறவினர்களும் ஊர் மக்களும் சந்தேகம் வெளியிட்டாலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்பு தான் இந்த மரணத்திற்கான காரணம் என்ன என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் முனாஸ் கூறினார்.

தமது கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சில மணி நேரத்தில் இறந்திருப்பதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின் கோணாவத்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.