
அச்சத்தில் வாழும் களுத்துறை தமிழ் கைதிகள்
இலங்கையில் கொழும்பு மகசின் சிறைச்சாலை வன்செயல்களை அடுத்து களுத்துறைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்டிருக்கிறார்கள்.
களுத்துறையில் சிறைச்சாலை நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், கடுமையான இடப்பற்றாக்குறை அங்கு காணப்படுவதாகவும், குடிநீர் மற்றும் மலசல கூடம் போன்றவற்றுக்கும் போதுமான வசதிகள் கிடையாது என்றும் அவர்கள் கவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
இன்று அவர்களைப் பார்க்கச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர்கள் இது தொடர்பாக ஒரு மகஜரையும் கையளித்திருக்கிறார்கள்.
அந்த மகஜரில் கடந்த 1883 ஆம் ஆண்டுக்கு பிறகு பத்துக்கும் அதிகமான தடவைகள் இலங்கை சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அவர்கள், இந்த நிலைமை தொடருவதால், தம்மை வடகிழக்கில் உள்ள பாதுகாப்பான சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு கோரியுள்ளனர்.
அதேவேளை, தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் நடவடிக்கைகளுக்காக ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் தமது வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
தமது வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு முடிவு காணப்பட வேண்டும் அல்லது தாம் பிணையிலாவது செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் கைதிகள் தம்மிடம் கோரியதாக அவர்களைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக உரியவர்களிடம் தாம் எடுத்துக் கூறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்செயல்களை அடுத்து, தமிழ் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே தாம் அவர்களை உடனடியாக களுத்துறைச் சிறைச்சாலைக்கு மாற்றியதாக கூறும் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகரான சிவலிங்கம் சதீஷ்குமார், தமக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து கைதிகள் எழுத்து மூல முறைப்பாடுகளை தரும்பட்சத்தில் அவை விரைவாக நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.








