
கடுமையான மழையும் வெள்ளமும்
இலங்கையில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக வடக்கே வன்னிப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 25, 000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வீடுகளில இடுப்பளவுக்கு வெள்ளம் புகந்திருப்பதனால் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து 29 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுகின்றது. அதேவேளை, வீட்டு நிலம் ஊற்றெடுத்திருப்பதனால் நிலத்தில் விரிப்பதற்கான விரிப்புகள் மற்றும் கூரை விரிப்புகள் தேவைப்படுவதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
மீள்குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படாத காரணத்தினால் சிரமங்களுக்கு மத்தியில் கொட்டில்களிலும் கூடாரங்களிலுமேவர்கள் வசித்து வருகின்றார்கள். இப்போது பெய்து வருகின்ற அடை மழை பல வழிகளிலும் அவர்களது துன்பத்தை அதிகரித்திருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுவதாக அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கூறுகின்றார்.
இந்த வருடத்தில் மிக அதிகமாக நேற்றைய தினம் 165 மில்லி மீற்றர் மழை கிளிநொச்சியில் பெய்திருப்பதாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரட்ணம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சீரற்ற கால நிலை தொடருமானால் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








