bbc.co.uk navigation

கோயிலுக்குள் நுழைந்து தமிழர்கள் மீது தாக்குதல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 டிசம்பர், 2011 - 16:04 ஜிஎம்டி
பிபிசி தமிழ்

பிபிசி தமிழ்

இலங்கையில் கேகாலை மாட்டத்தில் எட்டியாந்தோட்டைக்கு அருகே உள்ள எதுராபொல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அயலூர் பெரும்பான்மை இனத்தவர்களால் கடந்த புதனன்று இரவு தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை தேடி வருவதாக பொலிசார் கூறுகின்றனர்.

மார்கழி மாத பஜனை வழிபாடு தொடர்பான கோயில் கமிட்டிக் கூட்டமொன்றை நடத்திக்கொண்டிருந்த போது, கோயிலுக்குள் வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்தவர்கள் கோயில் வழிபாட்டுப் பொருட்களைத் தாக்கி, அங்கிருந்த இளைஞர்களையும் பெண்களையும் தாக்கிவிட்டுச் சென்றதாக தாக்கப்பட்டவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.

கோயிலுக்குள் நுழைந்து தமிழர்கள் மீது தாக்குதல்

தாக்கப்பட்டவர்கள், காவல்துறை கருத்துக்கள்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்தச் சம்பவத்தையடுத்து தம்மீது இதற்குப் பின்னரும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும் தாக்குதலுக்குள்ளான பெண்களில் ஒருவர் தமிழோசையிடம் கூறினார்.

குறித்தப் பிரதேசத்தில் அடிக்கடி இவ்வாறான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளதால் பொலிசாரும், தொழிற்சங்க அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் தமிழோசையிடம் பேசிய உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி அஜித் ரோகன தமிழோசையிடம் கூறினார்.

தாக்குதலில் தமிழர்கள் 4 பேர் காயமடைந்ததாகக் கூறிய பொலிஸ் பேச்சாளர், சம்பவ இடத்திற்கு சென்ற புளத்கொஹுபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காயப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறினார்.

பிரதான சந்தேக நபர் அன்றிரவே கைது செய்யப்பட்டு 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிசார் ஆதாரங்களை தேடிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்தச் சம்பவம் தனிப்பட்ட தகராறு என்றும் இனரீதியான முரண்பாடு அல்லவென்றும் கூறிய பொலிஸ் பேச்சாளர், அப்பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழோசையிடம் கூறினார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.