bbc.co.uk navigation

காணாமல்போனோர் தொடர்பில் யாழில் ஆர்ப்பாட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 டிசம்பர், 2011 - 13:24 ஜிஎம்டி

இலங்கையில் காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி , காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களைத் தேடியறியும் குழு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.


சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி யாழ் குடா நாடெங்கும் பொலிசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிசார் வீதிகளில் வாகனங்களை மறித்து சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.


இந்தக் குழுவைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது, பொலிசார் அவர்கள் சென்ற பேரூந்தை மறித்து சோதனையிட்டு, அவர்கள் கொண்டு சென்ற பதாதைகள், புகைப்படங்கள் என்பவற்றைக் கைப்பற்றியதுடன், அந்தக் குழுவினரையும் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகத் தடுத்து வைத்திருந்ததன் பின்னர் விடுவித்தனர்.


யாழ் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களான ஆண்களும் பெண்களும் காணாமல் போனவர்களின் மனைவியர் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அ.விநாயகமூர்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.கஜேந்திரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்வதாகக் கூறி அவர்களைக் கலைந்து செல்லுமாறு பொலிசார் கலைத்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் செல்லவில்லை.

காணாமல் போனவர்களைத் தேடியறியும் குழுவினர் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டதை அறிந்து அவ்விடத்திற்கு ஊர்வலமாகச் செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிசார் மிரட்டி தடுத்தனர்.

எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷங்கள் சத்தமிட்டு தமது கோரிக்கைகளை வெளியிட்டனர்.


மனித உரிமைகள் தினத்திலும் தமது உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாகக் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களும் இங்கு உரையாற்றியவர்களும் கண்டனக் குரல் எழுப்பினர்.


'காணமால் போனவர்களை அரசாங்கம் கண்டுபிடித்துத் தரவேண்டும்'. 'மறுக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க வேண்டும்'

'யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்களாகியுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கு உகந்ததோர் அரசியல் தீர்வைக் காண அரசு முன்வர வேண்டும்' என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உரையாற்றினார்கள்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.