bbc.co.uk navigation

கோம்பாவில் குடியேற்ற மக்கள் பாம்புக்கடி அச்சத்தில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 நவம்பர், 2011 - 16:46 ஜிஎம்டி
திம்பிலி பகுதியில் உள்ள குடியேற்ற குடியிருப்புகள்

திம்பிலி பகுதியில் உள்ள குடியேற்ற குடியிருப்புகள்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் கோம்பாவில் பகுதியில் உள்ள திம்பிலி என்ற இடத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தமக்கு அங்கு அடிப்படை வசதிகள் இல்லையென்றும் பாம்புகள் மற்றும் காட்டு உயிரினங்களால் ஆபத்து இருப்பதாகவும் கூறுகின்றார்கள்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுற்ற யுத்தத்தில் இறுதி மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் உட்பட பல பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேறிடத்தில் குடியேற்றப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதற்கமைய, முள்ளிவாய்க்கால் கிழக்கைச் சேர்ந்த 79 குடும்பங்கள் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு, திம்பிலி என்ற இந்த இடத்தில் கடந்த வியாழக்கிழமை குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.

முதற்கட்டமாக இந்தக் குடும்பங்கள் அங்கு குடியேற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இங்கு குடியேற்றப்படுகின்ற குடும்பம் ஒன்றிற்கு அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு, அதில் வீடு கட்டிக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் இரண்டு அறைகளைக் கொண்ட இந்தச் சிறிய வீடு தங்களுக்குப் போதாது என்றும் சமைப்பதற்குக் கூட வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அங்கு குடியேற்றப்பட்டிருப்பவர்கள் கூறுகின்றனர்.


இங்குள்ள நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சிவராஜசிங்கம் ஜெயகாந்த், தற்போது நிலவும் மாரி காலத்தில் பொதுவாகக் கிராமப்புறங்களில் பாம்புகளின் தொல்லை இருப்பது வழக்கம் என்றும் இதுபோலவே திம்பிலியிலும் நிலைமை இருப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் இங்கு குடியேற்றப்பட்டுள்ள மக்களின் நலன்களில் விசேட அக்கறை கொண்டு தாங்கள் செயற்பட்டு வருவதாகவும், ‘பாம்புக்கடிக்கு உள்ளாகியவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கென கொட்டும் மழையில் பாதை சீரற்றிருந்த போதிலும் இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும்’ அவர் தெரிவித்தார்.

இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை மேலும் சீர் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் கூறுகின்றார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.