
மாவீரர் நாளில் கோயிலில் மணியடிக்கத் தடை
விடுதலைப்புலிகளின் மாவீரர் நாளையொட்டிய தினங்களில் யாழ். காரைநகர் ஆலயங்களில் மணியொலிக்க இராணுவம் தடை விதித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
காரைநகர் இராணுவத்தினரே இந்த உத்தரவை அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து ஆலயங்களின் அர்ச்சகர்களுக்கு இட்டிருப்பதாக காரைநகர் பிரதேச சபையின் தலைவரான வேலாயுதம் ஆனைமுகன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
விடுதலைப்புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் 2009 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்டு வந்த போதிலும், அதன் பின்னர் இப்போது அது அனுட்டிக்கப்படுவதில்லை என்று கூறும் அவர், அந்த தினங்களில் ஆலயங்களில் மணியொலிக்கக்கூடாது, தீவட்டிகள் கொளுத்தக்கூடாது என்று இராணுவத்தினர் இந்து மத குருமாருக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறி அதனை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
மத வழிபாட்டிடங்களில் இப்படியான அரசியலுக்கும் இடம்கிடையாது என்றும், அதேவேளை இராணுவத்தினரின் இந்த உத்தரவு இந்து மத விவகாரங்களில் தலையிடும் ஒரு நிகழ்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே யாப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தையொட்டி, அதற்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அதனை அங்கு வந்த சிலர் கிழித்து சுவரொட்டி பலகைகளையும் உடைத்துவிட்டுச் சென்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.








