
முல்லைத்தீவு மீனவர்கள்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதில் இருந்த பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பல்வேறு பற்றாக்குறைகளுக்கு மத்தியிலேயே தாங்கள் தொழில் செய்ய வேண்டியிருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.
தொழில் செய்வதற்கு ஆர்வம் இருக்கின்ற போதிலும், அதற்குரிய படகுகள், போதிய வலைகள் என்ஜின்கள் இல்லாதிருப்பதனால், உபகரணங்கள் வைத்திருக்கின்ற ஒருசில மீனவர்களிடம் கூலி வேலை செய்தே வாழ்க்கை நடத்த வேண்டியிருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் ஆரம்பமாகி ஒன்றரை வருடங்களுக்கு மேலாகின்றது. எனினும் பல பிரதேசங்களில் இன்னும் மீள்குடியேற்றம் அனுமதிக்கப்படாத காரணத்தினால் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீனவ குடும்பங்களே தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பியுள்ளன.
இந்தக் குடும்பங்கள் மீள்குடியேறிய ஒழுங்கிற்கு அமைய அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் கட்டம் கட்டமாக உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ஒரே நேரத்தில் எல்லோருக்கும் உதவிகள் கிட்டவிலலை என மீனவவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மீனவர்களுக்குரிய படகுகள் போதிய வலைகள் மற்றும் உபகரணங்கள் கிடைக்காத காரணத்தினால் பெரும்பான்மையானவர்கள் கூலித் தொழில் செய்தே தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள்.
கடும் சண்டைகள் நடைபெற்ற இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் வெறும் கையுடன் தமது கிராமங்களுக்குத் திரும்பியிருப்பதனால், தமது வாழ்வாதாரத்திற்கு அரசாங்கத்தினதும் தொண்டு நிறுவனங்களினதும் உதவியையே நம்பியிருக்கின்றனர்.
அரசாங்கம் மீனவர்களுக்குரிய படகுகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கியுள்ளதுடன், தொண்டு நிறுவனங்களும் உதவி வருவதுடன் மீனவர்களுக்குரிய தொழில் பயிற்சிகளையும் வழங்கி வருவதாக கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் டேவிட் திருஞானரட்னம் தெரிவிக்கின்றார்.
ஆயினும் போர்ப்பிரதேசங்களில் இருந்து எடுக்கப்பட்ட படகுகளை அரசாங்கம் திருத்தம் செய்து மீனவர்களுக்கு வழங்கியுள்ளவை உட்பட தொண்டு நிறுவனங்களினாலும், அரசாங்கத்தினாலும், இதுவரையில் சுமார் 300 படகுகளே மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் சிறிஸ்கந்தராஜா அருள் ஜெனிபட் கூறியிருக்கின்றார்.








