bbc.co.uk navigation

எக்னலிகொட குறித்த மொஹான் பீரிஸ் கருத்தால் சர்ச்சை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 நவம்பர், 2011 - 16:37 ஜிஎம்டி
எக்னலிகொட எங்கிருக்கிறார் என்று கேள்விகள்

எக்னலிகொட எங்கிருக்கிறார் என்று கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன

இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல் போன செய்தியாளரான பிரகீத் எக்னலிகொட ஒரு வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார் என்று அந்நாட்டின் முன்னாள் சட்டமா அதிபரும், அரசின் சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் தெரிவித்ததாக வந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லங்கா இ நியூஸ் எனும் செய்தி இணையத்தின் ஆசிரியரும், கேலிச்சித்திர படங்கள் வரைபவருமான எக்னலிகொட காணமால் கடத்தி காணாமல் போனதாகக் கூறுவதும் அவரது விடுதலைக்காக நடைபெற்று வரும் பிரச்சாரங்களும் மோசடியான ஒரு செயல்பாடு எனவும் மொஹான் பீரீஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

"எனது கணவர் வெளிநாடு ஒன்றில் ஒளிந்து கொண்டிருப்பாரேயானால், எங்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க மாட்டார்"

சந்தியா எக்னலிகொட

அவர் கடத்தப்பட்டு காணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படியான கருத்துக்கள் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்தும் அவரது குடும்பத்தினரின் மன உளைச்சல் குறித்தும் அரசின் பாராமுகமான நிலைப்பாட்டையே காட்டுகிறது என்று ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பான சி பி ஜே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த மாதம் 8 ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தின் கேள்வி பதில் அமர்வின் போது, சித்திரவதை மற்றும் இதர மனிதாபிமானற்ற தண்டனைகள் குறித்த ஐ நா வின் துணைக் குழுவினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மொஹான் பீரிஸ், பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் கொழும்பு காவல்துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது என்றும், அவை தொடர்ந்து வருவதாகவும், இதுவரை யாரும் இது தொடர்பில் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆசிய மனித உரிமை அமைப்புகளோ, இந்த கேள்வி பதில் அமர்வில் பேசியபோது மொஹான் பீரிஸ் தமக்கு கிடைத்த நம்பகத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், எக்னலிகொட ஒரு வெளிநாட்டில் தஞ்சம் பெற்றுள்ளதாகவும், அவரது விடுதலைக்கான பிரச்சாரம் ஒரு மோசடியாகும் எனவும் தெரிவித்ததாகக் கூறுகிறது.

எனினும், எக்னலிகொட எங்கு தப்பிச் சென்றார் என்பது குறித்து எந்தவிதமான விரிவான தகவல்களையும் மொஹான் பீரிஸ் வெளியிடவில்லை என்றும் ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.

"கருத்துக்கள் கவலையடையச் செய்துள்ளன"

இந்நிலையில், மொஹான் பீரிஸ் அவர்கள் கூறுகின்றபடி தனது கணவர் வெளிநாடு ஒன்றில் ஒளிந்து கொண்டிருப்பாரேயானால், தங்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க மாட்டார் என்று அவரது மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார் என்று சி பி ஜே சொல்கிறது.

இப்படியான சூழலில் கொழும்பிலிருக்கும் இராஜதந்திர வட்டாரங்கள் மொஹான் பீரிஸின் அறிக்கை தங்களை கவலையடையச் செய்துள்ளன என்றும், சில தூதரகங்கள் இது குறித்து காவல்துறையினர் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசின் மூத்த சட்ட அலோசகராக இருக்கும் மொஹான் பீரிஸின் பேச்சுகள் எக்னலிகொட எங்கு இருக்கிறார் என்பது குறித்தும், அவருக்கு கிடைத்த தகவல்களின் ஆதாரங்களையும் வெளியிடால் இருப்பதும், அரசு எழுத்துமூலம் அளித்துள்ள அதிகாரபூர்வ விளக்கங்களுக்கு எதிராக உள்ளது என்றும் ஒரு இராஜதந்திரத் தகவல் தம்மிடம் கூறியதாக ஊடகவியாலாளர்கள் பாதுகாப்பு அமைப்பான சி பி ஜேயிடம் சொல்கிறது.

இது, ஒரு விடயத்தை மூடி மறைக்கும் நோக்கில் வேறு வழியில் அந்தச் சம்பவத்தை திசை திருப்பும் நடவடிக்கை என்றும் அந்தத் தூதரகம் தெரிவித்துள்ளதாகவும் சி பி ஜே கூறுகிறது.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.