
விஸ்வநாதன் உருத்திரகுமாரன்
இலங்கை இனப்பிரச்சினையில் நோர்வே எடுத்த மத்யஸ்த்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததற்கு இரு தரப்புகளும் மேற்கொண்ட இறுக்கமான நிலைப்பாடே காரணம் என்று நோர்வே அறிக்கை கூறியிருப்பதை, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தப் பேச்சுவார்த்தைகளில் சிலவற்றின் போது சட்ட ஆலோசகராக செயல்பட்டவரும், நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் பிரதமருமான, விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உளச்சுத்தியுடன் ஈடுபட்டனர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதே, விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கவரவாதம் என்ற கண்ணாடியினூடாகவே பார்த்து அவர்கள் இலங்கை அரசிடம் கொண்டிருந்த சமநிலையைக் குலைத்த, சர்வதேச சமூகம்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குக் காரணம் என்று உருத்திரகுமாரன் கூறினார்.
விடுதலைப்புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, பல விட்டுக்கொடுப்புகளைச் செய்தனர் என்று கூறிய உருத்திரகுமாரன், போர்நிறுத்த மீறல்கள் விஷயத்திலும், இலங்கை அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது என்றார். யுத்த நிறுத்த மீறல்கள் விஷயத்த்தில், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட,மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக்கூடாது, அதன் கீழுள்ள தாத்பர்யத்தைப் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததாக உருத்திரகுமாரன் கூறினார்.
புலம்பெயர் தமிழர்கள்
இனி இலங்கை இனப்பிரச்சினையில், புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை, இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் எடுக்கவேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்த உருத்திரகுமாரன், "இது போன்று, புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இலங்கையில் இருக்கவில்லை. இலங்கை ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது, எனவே புலம்பெயர்தமிழர்கள், இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை," என்றார் உருத்திரகுமாரன்.








