bbc.co.uk navigation

"இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 நவம்பர், 2011 - 16:23 ஜிஎம்டி
அம்னெஸ்ட்டி அமைப்பு

அம்னெஸ்ட்டி அமைப்பு

சி்த்ரவதைகளுக்கு எதிரான ஐ நா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் இந்த ரகசிய முகாம்களை நடத்தியதாகவும் - இதில் சில இன்னமும் செயல்படலாம் என்ற சந்தேகத்தையும் அம்னெஸ்ட்டி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதுபோன்ற இடங்களில் சித்ரவதைகள் - சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் போன்றவை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.

குறிப்பாக 7 முகாம்களின் முகவரியை அம்னெஸ்ட்டி அளித்துள்ளது. வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியாவில் இருக்கும் 211 ஆவது பிரிகேடின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளோட் அமைப்பின் வவுனியா தடுப்பு மையம் மற்றும் தர்மபுரத்துக்கு 14 மைல்கள் தொலைவில் உள்ள ஐந்து கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களில் முன்னாள் புலிகள் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 80 பேர் புலிகளின் முன்னணித் தலைவர்கள் என்றும் 300 பேர் புலிகளின் ஆதரவாக செயல்பட்ட பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர முல்லைத் தீவில் இரண்டு இரகசிய இடங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த அமர்வில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் குழுவின் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மனித உரிமை மீறல்கள் குறித்த அம்னெஸ்ட்டி உள்ளிட்ட அமைப்புக்கள் அளித்த ஆதாரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டோர் மீது சுயாதீனமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதில்லை என்றும் ஐ நாவின் சித்ரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவர் பெலிஸ் கியர் கூறினார்.

விவரம்

இலங்கை  இராணுவத்தினர்

இலங்கை இராணுவத்தினர்

பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்ததாக கூறிய அவர் - இப் புகார்களில் பலவந்தமாக காணமல் போனது, காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டது, பாலியல் தாக்குதல் நடைபெற்றது, மனித உரிமை குறித்த வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவது, சிறையில் நடைபெறும் மரணங்கள் போன்றவை அடங்கும் என்றார்.

இலங்கை அரசு தான் அறிவித்தபடி தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்களை வெளியிடவில்லை என்றும் ஐ நா அதிகாரி தெரிவி்த்தார்.

"இந்த ஆண்டின் ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம், தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்கள் அரசிடம் இருப்பதாகவும், இதை அவர்களின் உறவினர்கள் பெறலாம் என்று வெளியுறவுத் துறை கூறியிருந்தது. ஆனால் இது போன்ற விபரங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், விபரங்களைப் பெற முடியவில்லை என்று தன்னார்வ நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்." என்றார் பெலிஸ் கியர்.

சித்ரவதை தொடர்பான ஐநாவின் உடன்பாட்டில் சில அம்சங்களில் தனது நாடு கைச்சாத்திடவில்லை என்று இலங்கை அமைச்சரவை ஆலோசகராக தற்போது இருக்கும் - அரசின் முன்னாள் சட்டமா ஆதிபர் மோகன் பெரிஸ் சுட்டிக் காட்டினார்.

தமது அலுவலகத்தில் ரகசிய முகாம் ஏதும் செயல்படவில்லை என்று புளோட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த அமர்வில் எழுப்பப்பட்ட விடயங்கள் குறித்து இலங்கை அரசு புதன்கிழமை விரிவாக பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் விடுதலைப் புலிகள் போரின் இறுதி கட்டத்தில் செய்த தற்கொலைத் தாக்குதல்கள், கட்டாய ஆள்சேர்ப்பு போன்றவை குறித்து ஏற்கனவே ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் பெலிஸ் கியர் இன்றைய அமர்வில் பதிவு செய்தார்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.