
ஜிஎஸ்பி இடைநிறுத்திவைக்கப்பட்ட காலத்தில் இழக்கப்பட்ட வருமானங்களை நாடுகளுக்கு மீளச் செலுத்தவும் அமெரிக்கா இணங்கியுள்ளது
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை திட்டம் காங்கிரஸ் அங்கீகாரத்துடன் அடுத்த மாதம் முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் தகவலின்படி, கடந்த 2010ம் ஆண்டில் சுமார் 1.77 பில்லியன் டொலர்கள் வரையான வருமானம், (இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 21 வீதம்) அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 147 மில்லியன் டொலர்கள் வரையான வரிச்சலுகையை அமெரிக்க ஜீ.எஸ்.பி திட்டத்தின் மூலம் இலங்கை ஈட்டியிருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
அமெரிக்கச் சந்தைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் 129 நாடுகளுக்கு நன்மையளித்துவந்த ஜிஎஸ்பி திட்டம் இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டு காங்கிரஸின் அங்கீகாரத்துக்காக காத்திருந்தது.
இந்த நிலையிலேயே இப்போது மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ள ஜிஎஸ்பி திட்டம் எதிர்வரும் 5ம் திகதியிலிருந்து 2013ம் ஆண்டு ஜூலை மாதம் வரை அமுலிலிருக்கும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளதுடன், இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலத்தில் இழக்கப்பட்ட வருமானத்தை குறித்த நாடுகளுக்கு மீண்டும் திருப்பியளிக்கவும் முன்வந்திருக்கின்றது.
இலங்கையில் தொழிற்சங்கங்கள் விசனம்

இலங்கையில் இன்னும் தொழிலாளர் நலன்கள் மேம்படவில்லையென்று குற்றச்சாட்டு
இதேவேளை, சர்வதேச சட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ள தொழிலாளர் உரிமைகள் இலங்கையில் மீறப்படுவதாக சுட்டிக்காட்டிய இலங்கையின் முக்கிய தொழிற்சங்கங்கள் சில கடந்த ஆண்டில் அமெரிக்காவிடம் முறையிட்டிருந்தன.
இலங்கையில் தொழிற்சங்க போராட்டங்கள், தொழிலாளர் பேரம் பேசும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த முறைப்பாட்டை செய்ததாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் பிபிசியிடம் கூறினார்.
இலங்கையில் தொழிலாளர்களின் நிலையில் இன்னும் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தொழிற்சங்கங்களின் இந்த முறைப்பாடுகள் பற்றி இலங்கை அரசுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








