
ஆளுங்கட்சி 23 சபைகளில் 21ஐக் கைப்பற்றியது
இலங்கையில் சனிக்கிழமை 8ம் திகதி நடந்து முடிந்த மூன்றாம் கட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23 உள்ளூராட்சி சபைகளில் 21 சபைகளைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றிருக்கின்றது.
கட்டம் கட்டமாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி முழுப்பலத்தையும் பிரயோகித்து அரசு வெற்றி பெற முனைவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த பின்னணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பபட்ட கொழும்பு மாநகரசபையில் எதிர்பார்த்த வெற்றியை ஆளுங்கட்சியால் பெறமுடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.
கொழும்பு மாநகரசபையில் மொத்தமாகவுள்ள 53 ஆசனங்களில் ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆசனங்களையும், 16 ஆசனங்களை ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஆளுங்கட்சியும் 6 ஆசனங்களை மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் இரண்டு ஆசனங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இதர சுயேட்சைக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் எஞ்சிய ஆசனங்களையும் பெற்றுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி

கொழும்பு மாநகர சபை ஐக்கிய தேசிய கட்சி வசம்
கடந்த கால தேர்தல்களில் தொடர்ச்சியாக சந்தித்துவந்த தோல்விகளாலும் அண்மைக்காலங்களில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்களாலும் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொழும்பு மாநகரை தொடர்ந்தும் தக்க வைத்திருக்க முடிந்திருக்கின்றது.
ஆனாலும் பல தசாப்தங்களாக தமது கைக்குள் வைத்திருந்த கண்டி, நுவரெலியா, கல்கிசை மற்றும் தெஹிவளை மாநகர சபைகளின் நிர்வாகங்களை ஐக்கிய தேசியக் கட்சி சில ஆயிரங்கள் கணக்கான வாக்குகளால் ஆளுங்கட்சியிடம் இழந்திருக்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில், மொத்தமாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 245 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 131 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13 ஆசனங்களையும் ஒருகாலத்தில் மகிந்த ஆட்சியமைக்க உறுதுணையாய் இருந்த ஜேவிபி வெறும் 5 ஆசனங்களையுமே கைப்பற்றியுள்ளன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களுடன் கல்முனை மாநாகர சபையை கைப்பற்றியுள்ளது. அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
மனோ கணேசன் விக்ரமபாகு கருணாரத்ன கூ்ட்டணி மொத்தமாக 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
தெஹிவளை- க்ல்கிசை மாநாகர சபையில் அந்தக் கூட்டணி பெற்றுள்ள ஒரு ஆசனத்தில் விக்ரமபாகு கருணாரத்ன வென்றுள்ளார்.
இதற்கிடையே, மனோ கணேசன் கட்சி உள்ளிட்ட எதிரணிகளையும் உள்வாங்கிக்கொண்டே கொழும்பை நிர்வகிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியது.
கொழும்பில் பிபிசியின் சந்தேஷவிடம் பேசிய மனோ கணேசன், தாம் சுயாதீனமாகவே செயற்படவுள்ளதாக கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2 வது இடத்தில்

கல்முனை மாநகர சபையை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
இலங்கையில் மொத்தமாகவுள்ள 335 உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த மார்ச், ஜூலை மற்றும் நேற்று 8ம் திகதி நடந்த தேர்தல்களில் இதுவரை, 322 சபைகளுக்கு தேர்தல் நடந்துவிட்டது.
மீதமுள்ளவற்றில் இன்னும் பதவிக்காலம் முடியாதுள்ள 11 உள்ளூராட்சி சபைகள் போக முல்லைத்தீவிலுள்ள 2 சபைகளுக்கே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றது.
மீள்குடியேற்றப் பிரச்சனைகள் அதற்கு காரணமாகக் கூறப்படுகின்றன.
இதுவரை நடந்த தேர்தல் முடிவுகளின் படி, 270 உள்ளூராட்சி நிர்வாகங்களை ஆளுங்கட்சி பிடித்துள்ளது. வெறும் 10 மன்றங்கள் தான் ஐக்கிய தேசியக் கட்சியிடம் உள்ளன. கடந்த காலங்களில் வைத்திருந்த சபைகளில் பலவற்றை ஐக்கிய தேசிய க்கட்சி இம்முறை இழந்திருக்கிறது.
இலங்கையில் போர் முடிந்த பின்னர் நடந்துள்ள இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் 32 உள்ளூராட்சி நிர்வாகங்களை வென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் நாட்டில் உள்ளுராட்சி நிர்வாகத்தை வைத்திருக்கின்ற இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக திகழ்கின்றது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.








